கேரள சமாஜம் சார்பில் ஓணம் கொண்டாட்டம்
பல்லடம்: பல்லடத்தில், கேரள சமாஜம் சார்பில், ஓணோற்சவ விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, பல்லடம் கேரளா சமாஜம் சார்பில், ஓணோற்சவ விழா, நடந்தது. சமாஜத்தின் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார். செயலாளர் நாராயணன், பொருளாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். கேரள மின்வாரிய அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, பல்லடம் நகராட்சி தலைவர் கவிதாமணி, தி.மு.க., நகர செயலாளர் ராஜேந்திரகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். முன்னதாக, காலை 9.00 மணிக்கு, பூக்களம் நிகழ்ச்சி நடந்தது. ஓணம் பண்டிகையை வரவேற்கும் விதமாக, அத்தப்பூ கோலம் வரைந்தனர். தொடர்ந்து, விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டன. மதியம், 12.00 மணிக்கு ஓணம் சத்யா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாலை, திருவாதிரை களி, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு, உதேஷ் கலாபவனின் இசை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.