தீபாவளி நெரிசல் தடுக்க உத்தரவு
திருப்பூர்:தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். கலெக்டர் பேசியதாவது: தீபாவளியை முன்னிட்டு பொதுமக்களின் போக்குவரத்துக்கு சிரமம் ஏற்படாதவகையில், போதுமான எண்ணிக்கையில் பஸ் இயக்கப்பட வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பஸ்கள் மீது, வட்டார போக்குவரத்து துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநகராட்சி சார்பில், பஸ் ஸ்டாண்ட்களில், போதிய குடிநீர் வசதி, கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவேண்டும். போலீசார், போக்குவரத்து நெரிசலை தடுக்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டும். சுகாதாரத்துறையினர், பஸ்ஸ்டாண்ட்களில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்த வேண்டும். தீ விபத்து உள்ளிட்ட பேரிடர்கள் ஏற்பட்டால் உடனடியாக மீட்பு பணிகளில் ஈடுபட ஏதுவாக, தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்கவேண்டும். தற்காலிக மற்றும் நிரந்தர பட்டாசு கடைகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு துறையினர், தீபாவளி பண்டிகையின்போது விற்பனை செய்யப்படும் இனிப்பு மற்றும் காரம் உள்ளிட்ட உணவுப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு செய்யவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். போலீஸ் துணை கமிஷனர்கள் தீபா சத்யன், பிரவீன் கவுதம், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜ், வருவாய் கோட்டாட்சியர் சிவபிரகாஷ் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.