உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு

நீர் நிலை ஆக்கிரமிப்புகள் அகற்ற உத்தரவு

திருப்பூர்: வடகிழக்கு பருவமழை பெய்துவரும் நிலையில், ஆறு, குளம், குட்டை ஆகிய நீர் நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் மற்றும் ஊரக, நகர சாலை திட்ட பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் மனிஷ் நாரணவரேமுன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ்,பருவமழை முன்னேற்பாடுகள், வீட்டுமனை பட்டா, தாயுமானவர் திட்டம், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து, துறை சார்ந்த அரசு அலுவலர்களுடன் ஆய்வு நடத்தினர். ஆய்வுக்குப்பின் கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ் பேசியதாவது: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், திருமூர்த்தி அணை, அமராவதி, உப்பாறு அணைகளுக்கு நீர் வரத்து, நீர் வெளியேற்றம், அணையின் கொள்ளளவு ஆகியவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படும்போது, கரையோர மக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு முன்னரே தெரிவிக்கவேண்டும். கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்ல அறிவுறுத்தவேண்டும். மழையால் பாதிப்பு ஏற்படும்போது மக்களை தங்கவைப்பதற்கு 52 நிவாரண முகாம்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. நீர் நிலை பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். நீர் நிலை கரைகளின் உறுதித்தன்மையை ஆராய்ந்து, பலவீனமான கரைகளை, பலப்படுத்தவேண்டும். நீர் நிலைகளில், ஆழமான மற்றும் ஆபத்தான இடங்களில் பொதுமக்கள், சிறுவர், சிறுமியர் இறங்குவதால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பாக முன்னெச்சரிக்கை விளம்பர பலகைகள் வைக்கவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். மாநகராட்சி கமிஷனர் அமித், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கமித்திரை, ஆர்.டி.ஓ.,க்கள் சிவபிரகாஷ், குமார், பெலிக்ஸ் ராஜா உள்பட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி