உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விவசாயிகள் பெயரில் குளங்களில் அமோகம்...கிராவல் மண் கடத்தல்!விதிமீறலை கண்டுகொள்ளாததால் அவலம்

விவசாயிகள் பெயரில் குளங்களில் அமோகம்...கிராவல் மண் கடத்தல்!விதிமீறலை கண்டுகொள்ளாததால் அவலம்

உடுமலை;விவசாயிகளின் பெயரில், குளத்தில் இருந்து வணிக ரீதியாக கிராவல் மண் அள்ளி, விற்பனை செய்வதைக்கண்டித்து, குடிமங்கலம் கிராம மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்; இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் மண் அள்ள தற்காலிக தடை விதித்துள்ளனர். பல குளங்கள் வணிக ரீதியாக சூறையாடப்படுவது விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, நீர்நிலைகளை ஆழப்படுத்தவும், மண் வளத்தை மேம்படுத்தவும், வண்டல் மண் எடுத்து கொள்ள, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் இம்மாத துவக்கத்தில், அனுமதி வழங்கியது.இதில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள, திருமூர்த்தி அணை மற்றும் குளங்கள், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள கிராம குளங்கள் பட்டியல் வெளியிடப்பட்டு, விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது.'முதல் கோணல் முற்றிலும் கோணல்', என்பது போல, விவசாயிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவே திணற வேண்டிய நிலை ஏற்பட்டது.வியாபார ரீதியாக மண் அள்ளுபவர்கள், விவசாயிகள் விண்ணப்பிக்க முடியாத அளவுக்கு குளறுபடிகளை ஏற்படுத்துவதாக புகார் எழுந்தது. தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.இந்நிலையில், மாவட்டம் முழுவதும், வண்டல் மண் அள்ள அரசு அறிவித்த விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல், வணிக ரீதியாக கிராவல் மண் கொள்ளையடிக்கப்படுகிறது என புகார் எழுந்தது.

குளக்கரையில் போராட்டம்

இதை உறுதிப்படுத்தும் வகையில், குடிமங்கலம் குளத்தில் நடந்த விதிமீறல்களால், ஆவேசமடைந்த விவசாயிகள், விவசாய சங்கத்தினர், நேற்று குளத்து கரையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.'வண்டல் மண் எடுக்கும் முன், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக வரைபடத்தில், அளவீடுகள் குறியீடு செய்து, அப்பகுதியில் மட்டுமே வண்டல் மண் எடுக்கப்பட வேண்டும். தரையின் மட்டம், குளத்திலுள்ள மடையின் அடிமட்டத்துக்கு கீழ் செல்லக்கூடாது,' என பல்வேறு விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.ஆனால், குடிமங்கலம் குளத்தில், எவ்வித விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை; ஒரே இடத்தில், பல அடி ஆழத்துக்கு, மெகா குழிகள் தோண்டியும், சிறிய பாறைகளை உடைத்தும், கிராவல் மண் அள்ளப்பட்டு, விற்பனை செய்யப்பட்டுள்ளது.அதிகாரிகள் அளவீடு எதுவும் செய்து கொடுக்கவில்லை. ஒரே நாளில், ஆயிரக்கணக்கான லோடு கிராவல் மண் அள்ளப்பட்டு, குளம் முற்றிலுமாக சீரழிக்கப்பட்டு வருகிறது. வண்டல் மண் அள்ளும் திட்டம் என்ற பெயரில் கிராவல் மண் கொள்ளை நடக்கிறது,' என விவசாயிகள் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு உடுமலை தாசில்தார் சுந்தரம், வருவாய் ஆய்வாளர் நாகராஜன் உள்ளிட்டோர் சென்று ஆய்வு செய்து, விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'குடிமங்கலம் குளம், ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டிலுள்ள குளமாகும். விவசாயிகள் புகார் அடிப்படையில், ஆய்வு செய்து, மண் அள்ள தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அதிகாரிகளிடம், மண் எடுத்த நபர்கள் பட்டியல் மற்றும் அளவீட்டு விபரங்கள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கை அடிப்படையில் விதிமீறல்கள் இருந்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.

ஆய்வு தேவை

உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில், வண்டல் மண் அள்ள தேர்வு செய்யப்பட்ட குளங்களில், விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படுவதில்லை. ஒன்றிய அதிகாரிகள் அளவீடு செய்து தரவோ, கண்காணிப்பதோ இல்லை. இதனால், ஒரே நாளில், ஆயிரக்கணக்கான லோடு கிராவல் மண் குளங்களில் அள்ளப்படுகிறது. பாறை தெரியும் அளவுக்கு மண் முற்றிலுமாக அகற்றப்படுவதால், குளங்களில் தண்ணீரை நிறுத்தினாலும், சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயராது என இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். விவசாயிகள் பெயரை பயன்படுத்தி, நீர்நிலைகள் சூறையாடப்படுவது குறித்து திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நேரடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி