அமராவதி பழைய ஆயக்கட்டில் நெல் சாகுபடி பணிகள் தீவிரம்
உடுமலை; அமராவதி அணையிலிருந்து, பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டதையடுத்து, இரண்டாம் போகம் நெல் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.உடுமலை அருகேயுள்ள, அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டத்திலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அமராவதி பழைய ஆயக்கட்டு, உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள, எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திற்குட்பட்ட, 7,520 ஏக்கர் நிலங்களில், இரண்டாம் போகம் நெல் சாகுபடிக்காக, கடந்த, 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.இதனையடுத்து, இப்பகுதிகளில் விவசாயிகள், நாற்றங்கால் முறை, நேரடி நெல் விதைப்பு முறைகளில், சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், மீண்டும் இப்பகுதிகள் பசுமையாக காணப்படுகிறது.இரண்டாம் பருவமான, சம்பா சாகுபடிக்கு, வரும், பிப்.,24 வரை, 80 நாட்களில், 41 நாட்கள் தண்ணீர் திறப்பு, 39 நாட்கள் அடைப்பு என்ற சுற்றுக்கள் அடிப்படையில் நீர் திறக்கப்படுகிறது.சம்பா நெல் சாகுபடிக்கு, 120 நாட்கள் நீர் தேவை உள்ள நிலையில், 80 நாட்கள் மட்டுமே அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது அணை நீர் இருப்பு திருப்தியாக உள்ளதால், கூடுதலாக, ஒன்றரை மாதம் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.