குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரக விதைகள்; திருப்பூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் டன் உற்பத்தி
உடுமலை; தமிழக அளவில் விதை நெல் உற்பத்தி மையமாக உள்ள திருப்பூர் மாவட்டத்திலிருந்து, குறுவை பருவத்திற்கு ஏற்ற நெல் ரக விதைகள் உற்பத்தி செய்து, மாநிலம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, விதைச்சான்றுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தமிழகத்தில், ஆண்டு தோறும், 20 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, 74 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்படுகிறது.தமிழகம் முழுவதும் நெல் சாகுபடி இருந்தாலும், திருப்பூர் மாவட்டம் சாகுபடிக்கு தேவையான நெல் விதை உற்பத்தி மையமாக உள்ளது.திருப்பூர் மாவட்ட விதைசான்றழிப்பு மற்றும் உயிர்ம சான்றழிப்பு உதவி இயக்குனர் மணிகண்டன் கூறியதாவது:மாவட்டத்தில் தனியார் விதை உற்பத்தி நிலையங்கள், அரசு விதைப்பண்ணைகள் மற்றும் வட்டாரம் வாரியாக விதை உற்பத்தி மையங்கள் அதிகளவு உள்ளன.இங்கு உற்பத்தி செய்யப்படும் நெல் விதைகள், தமிழகம் முழுவதும் சான்று பெற்ற விதைகளாக விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.கடந்தாண்டு, திருப்பூர் மாவட்டத்தில், 21 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில், நெல் விதைப்பண்ணைகள் அமைத்து, தமிழகம் முழுவதும், 70 ஆயிரம் டன் நெல் விதைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.அமராவதி பாசன பகுதி மட்டுமின்றி, காவிரி டெல்டா மாவட்டங்களான, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நெல் விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டன.அங்கு, ஆதார நிலை விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தாராபுரம், மடத்துக்குளம் பகுதிகளிலுள்ள, தனியார் விதை சுத்தி நிலையங்களில், சுத்தி பணி மேற்கொள்ளப்பட்டு, விதை சான்றளிப்பு அலுவலர்களால், விதை மாதிரிகள் சேகரித்து, அரசு அங்கீகாரம் பெற்ற விதை பரிசோதனை நிலையங்களுக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.ஆய்வில், விதைகளின் முளைப்புத்திறன், பிற ரக கலவன், ஈரப்பதம், புறத்துாய்மை போன்ற இனங்களில் தேர்ச்சி பெறும், விதைக்குவியல்களுக்கு சான்று அட்டை பொருத்தப்பட்டு, தரமான சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.தற்போது துவங்கியுள்ள குறுவை சாகுபடிக்கு ஏற்ற நெல் ரகங்களான, கோ., 51, கோ., 55, ஏ.டி.டி., 37, ஏ.டி.டி., 45, டி.பி.எஸ்., 5, ஏ.எஸ்.டி., 16 உள்ளிட்ட ரகங்கள், விதைப்பண்ணை முதல் சுத்திப்பணி வரை முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, விதைப்பரிசோதனை முடிவு பெற்று, 15 ஆயிரம் டன் விதைகள் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.அடுத்து துவங்க உள்ள சம்பா பருவத்திற்கு ஏற்ற, மத்திய மற்றும் நீண்ட கால பயிர் ரகங்களான, சாவித்திரி, சிஆர்-1009, ஏ.டி.டி., 46, ஏ.டி.டி., 38 உள்ளிட்ட ரக விதைகள் வயலாய்வில் தேர்வு செய்யப்பட்டு, சுத்திப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.திருப்பூர் மாவட்டம், நெல் விதை உற்பத்தி மையமாக உள்ளதால், தமிழகம் முழுவதும், குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடிக்கு தேவையான அனைத்து நெல் ரகங்களின் விதைகளும், விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க விதைச்சான்றுத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு, தெரிவித்தார்.