பல்லடம்: பல்லடத்தைச் சேர்ந்த கல்லுாரி மாணவி ஒருவர், தனது தந்தை உயிரிழந்த நிலையிலும், சர்வதேச அளவிலான நடன போட்டியில் பங்கேற்று, வெள்ளிப் பதக்கம் வென்று, தந்தையின் கனவை நிறைவேற்றி உள்ளார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், பெருமாக் கவுண்டம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் -- ராஜேஸ்வரி தம்பதியரின் மகள் பிரஹதி, 20. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலையில், பாரா மெடிக்கல் சயின்ஸ் படிக்கிறார். நடனத்தின் மீது இவருக்கு அதிக ஆர்வம் உண்டு. இவரது தந்தை உயிரிழந்த நிலையிலும், சர்வதேச அளவிலான நடன போட்டியில் பங்கேற்ற பிரகதி, வெள்ளிப் பதக்கம் வென்று, தனது தந்தையின் கனவை நிறைவேற்றி உள்ளார். இது குறித்து பிரஹதி கூறியதாவது: எனது தந்தை கும்மியாட்டம், காவடி ஆட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களில் ஆர்வம் கொண்டவர். அவரது ஆர்வம் காரணமாக, சிறு வயது முதலே நானும் நடனத்தை நேசிக்க துவங்கினேன். சென்னையில் கல்லுாரி படிப்பு படித்து வந்த போதும், நடன பயிற்சியும் மேற்கொண்டு வந்தேன். சென்னையில் உள்ள 'ஸ்குவாட் ஆப் யுனைட்டி' நடன குழுவினர் எனக்கு பயிற்சி அளித்தனர். சென்னை, கோவையில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்றபோதும், என்னால் பெரிய அளவு வெற்றியை காண முடியவில்லை. இதற்கிடையே, இரண்டு மாதத்துக்கு முன், எனது தந்தை, வாகன விபத்தில் உயிரிழந்தார். அந்த நேரத்தில் நான் எனது உலகையே இழந்து விட்டதாக கருதினேன். தந்தையின் மறைவால் ஏற்பட்ட துயரத்தை நடனத்தின் வாயிலாக வெளிப்படுத்த விரும்பினேன். சென்னையில் நடந்த மூன்று முக்கிய போட்டிகளில் பங்கேற்று, முதல் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றேன். இதனால், கடந்த, 8ம் தேதி சிங்கப்பூரில் நடந்த சர்வதேச நடனப் போட்டியில் பங்கேற்றேன். இதில், 27 நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்றனர். தனிநபர் பிரிவில் வெள்ளிப் பதக்கம் கிடைத்ததுடன், குழு போட்டியிலும் வெற்றி பெற்றோம். சிறிய கிராமத்தில் பிறந்த நான், உலக அரங்கில் இவ்வாறு நிற்பது எனது தந்தை விருப்பம். அவரின் ஆசியுடன், இன்னும் பல சாதனைகளை செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.