பஞ்சலிங்க அருவி பாலம் சீரமைப்பு; சுற்றுலா பயணியர் குளிக்க அனுமதி
உடுமலை: காட்டாற்று வெள்ளத்தில், பாதிக்கப்பட்ட பாலம் சீரமைக்கப்பட்ட பிறகு, நேற்று பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர். உடுமலை அருகே திருமூர்த்திமலையில் அமைந்துள்ள பஞ்சலிங்க அருவி, பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகும். அருவியின் மேல், பஞ்சலிங்கங்களும் அமைந்துள்ளன. அக்., 18ம் தேதி இரவு, மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக, காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது; பஞ்சலிங்க அருவி அருகே அமைக்கப்பட்டிருந்த இரும்பு பாலமும் இந்த வெள்ளத்தில் சேதமடைந்தது. இதையடுத்து, அருவிக்கு செல்ல சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது; விசேஷ நாட்களில் பஞ்சலிங்கங்கள் பூஜைக்கும் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பாலத்தை சீரமைப்பது குறித்து ஹிந்து அறநிலையத்துறை செயற்பொறியாளர் ஆனந்தராஜ்உமாபதி, உதவிக்கோட்ட பொறியாளர் சத்யா, உதவிப்பொறியாளர் கார்த்திக் ஆகியோர் ஆய்வு செய்த பிறகு சீரமைப்பு பணிகள் துவங்கியது. சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கப்பட்ட பிறகு, பாலத்துக்கு வர்ணம் பூசினர். அனைத்து பணிகளும் நேற்று முன்தினம் நிறைவு பெற்றதால், நேற்று பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலா பயணியர் அனுமதிக்கப்பட்டனர். சீரான நீர் வரத்து இருந்ததால், அவர்கள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அருவி மற்றும் வழித்தடத்தில், அமணலிங்கேஸ்வரர் கோவில் பணியாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.