பி.டி.ஓ., உத்தரவை கண்டித்து ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்
பல்லடம்; பல்லடம் ஒன்றியத்தில், வடுகபாளையம்புதுார், சித்தம்பலம், புளியம்பட்டி, கரடிவாவி, கணபதிபாளையம், சுக்கம்பாளையம், பருவாய், மாணிக்காபுரம் ஆகிய ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து, பி.டி.ஓ., கனகராஜ் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர், பல்லடம் பி.டி.ஓ., அலுவலக வளாகத்தில் நேற்று, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த, மாவட்டத் தலைவர் நல்ல சேனாதிபதி பேசியதாவது:ஊராட்சி செயலர்கள், தாங்கள் வேலை பார்க்கும் ஊராட்சியில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. இதன்படி தான், ஊராட்சி செயலர்கள் வேலை பார்த்து வருகின்றனர். திடீரென, பல்லடம் ஒன்றியத்தில் உள்ள ஏழு ஊராட்சி செயலர்களை பணியிட மாற்றம் செய்து பி.டி.ஓ., உத்தரவிட்டுள்ளார். கலந்தாய்வின் அடிப்படையில் மாற்றம் செய்திருக்க வேண்டும்.இதனை தவிர்த்து, அரசியல் காரணங்களுக்காக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பி.டி.ஓ.,வின் இந்த உத்தரவை வன்மையாக கண்டிக்கிறோம். உத்தரவை வாபஸ் பெறுவதாக கலெக்டரின் வாய்மொழி உத்தரவு கிடைத்துள்ளது. இருப்பினும், பி.டி.ஓ.,வை சந்தித்து இது குறித்து தெளிவுபடுத்திய பின்னரே இங்கிருந்து செல்வோம்.இவ்வாறு அவர் பேசினார்.இதனை தொடர்ந்து, பி.டி.ஓ., வரும்வரை காத்திருப்பதாக கூறி, ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.