பி.ஏ.பி., கிளைக்கால்வாய் புதுப்பிக்க வலியுறுத்தல்
உடுமலை; உடுமலையில் சிதிலமடைந்துள்ள பி.ஏ.பி.,கிளைக்கால்வாயை புதுப்பிக்க நிதி ஒதுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, தமிழக முதல்வருக்கும், அதிகாரிகளுக்கும் அவர்கள் மனு அனுப்பியுள்ளனர்.பி.ஏ.பி., பாசனத்திட்டம் வாயிலாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில், 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதில் பி.ஏ.பி., உடுமலை கால்வாயிலிருந்து, 3.67 வது கி.மீ., ல் பிரியும், கிளுவன் காட்டூர் கிளைக்கால்வாய், 10 கி.மீ., நீளம் கொண்டதாகும்.உடுமலை ஒன்றியத்திலுள்ள, 8 கிராமங்கள் வழியாக செல்லும் இந்த கால்வாய் வாயிலாக, பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இக்கால்வாய் முழுவதும் சிதிலமடைந்து, பாசனத்திற்கு நீர் செல்ல முடியாத அளவிற்கு மாறியுள்ளது.இதனால், அப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதனை புதுப்பிக்க வேண்டும் என, இரு ஆண்டுகளாக பி.ஏ.பி., அதிகாரிகளுக்கு மனு அளித்தும், நிதி இல்லை என கூறி பணி மேற்கொள்ளவில்லை.இதன் காரணமாக, விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். வரும், ஜன.,ல், பி.ஏ.பி., மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட உள்ள நிலையில், உடனடியாக பி.ஏ.பி., கிளுவன்காட்டூர் கிளைக்கால்வாயை புதுப்பிக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.இது குறித்து, தி.மு.க., ஒன்றிய செயலாளர் தங்கராஜ், முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.தமிழக அரசும், பொதுப்பணித்துறையினரும், பி.ஏ.பி., கிளை கால்வாயை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் வாயிலாக, பாசன விவசாயிகள் பெரிதும் பயனடைவர்.