விடுமுறையில் சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு பெற்றோர் எதிர்ப்பு
உடுமலை; உடுமலை சுற்றுப்பகுதியில் தேர்வுகள் முடிந்தும், மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல் வகுப்புகள் நடத்துவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, 2 பொதுத்தேர்வுகள் உட்பட துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள அனைத்து வகுப்புகளுக்கும், முழு ஆண்டு தேர்வுகள் நிறைவு பெற்று விட்டது. கோடை விடுமுறையும் அறிவிக்கப்பட்டு விட்டது.ஆனால்,உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் சுற்றுப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிகளில், மாணவர்களுக்கு விடுமுறை விடாமல் தொடர்ந்து பள்ளிகள் செயல்படுகின்றன.வரும் புதிய கல்வியாண்டில், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு, தற்போது சிறப்பு வகுப்புகள் நடக்கிறது. கோடை வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.சில பள்ளிகளில், காலை முதல் மதியம் வரையில் சிறப்பு வகுப்புகள் நடக்கிறது. மதியம் வீடுகளுக்கு மாணவர்கள் திரும்பிச்செல்லும் போது பலரும், வெப்பத்தால் பாதிக்கப்படுகின்றனர்.பெற்றோர் கூறியதாவது: விடுமுறை அறிவிக்கப்பட்டும், மாணவர்கள் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது. கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், மாணவர்களுக்கு உடல்நலனும் தொடர்ந்து பாதிக்கப்படுகிறது.கல்வித்துறை அலுவலர்கள் இதுகுறித்து, பள்ளிகளில் விசாரிக்க வேண்டும். மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, கோடை விடுமுறையில் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு கூறினர்.