தொழிலாளி குடும்பத்துக்கு ஓய்வூதியம் ரூ.1.12 லட்சம் காப்பீடு தொகை
திருப்பூர், : பணி நேரத்தில் இறந்த தொழிலாளி குடும்பத்துக்கு, மாதாந்திர ஓய்வூதிய உத்தரவு மற்றும் 1.12 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை வழங்கப்பட்டது.இ.எஸ்.ஐ., திட்டம் வாயிலாக, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், சமூக பாதுகாப்பு திட்டத்தில், காப்பீடு பெற்ற தொழிலாளர்களுக்கு, இடர்பாடு ஏற்படும் காலங்களில் தேவையான உதவி வழங்கப்படுகிறது. குறிப்பாக, தொழிலாளருக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நீண்டகால உதவித்தொகை (ஓய்வூதியம்) வழங்கப்படுகிறது.நிரந்தர உடல் ஊனம் உதவித்தொகை மற்றும் சார்ந்ததோருக்கான உதவித்தொகை, பணியில் சேர்ந்த நாளில் இருந்தே வழங்கப்படுகிறது. கிளை அலுவலகங்களின் முயற்சியால், விரைவாக விசாரணை நடத்தி, தேவையான உதவி, நிர்ணயித்து வழங்கப்படுகிறது.திருப்பூர் எஸ்.ஆர்.ஜி., அப்பேரல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய தொழிலாளர் குடும்பத்துக்கு, நேற்று உதவி வழங்கப்பட்டது.இ.எஸ்.ஐ., திட்டத்தில் இருந்த தொழிலாளி ஆனந்தகுமார், 49 பணி நேரத்தில் இறந்தார். அவரது குடும்பத்தினருக்கு, மாதாந்திர ஓய்வூதியம் பெறும் உத்தரவு வழங்கப்பட்டது.இ.எஸ்.ஐ., கோவை சார் மண்டல அலுவலக இணை இயக்குனர் (பொ) ரவிக்குமார் உத்தரவுப்படி, கூடுதல் இயக்குனர் பெருமாள், மாதாந்திர ஓய்வூதிய உத்தரவு மற்றும் ஒரு லட்சத்து, 12 ஆயிரத்து, 225 ரூபாய்க்கான காசோலையை, குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கினார்.நிகழ்ச்சியில், இ.எஸ்.ஐ., கே.என்.பி., புரம் கிளை மேலாளர் இந்திரலேகா, நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை மேலாளர் கதிர்வேலன் மற்றும் தொழிலாளியின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.