ஓய்வூதியர் வலி தீர்க்கும் வழிகாட்டி
மத்திய, மாநில அரசு ஊழியர்களின் ஓய்வுக்காலத்திற்கான வாழ்வாதாரமாக பென்ஷன் அமைகிறது. பணி ஓய்வு காலத்தில், பிணி போக்கும் மருத்துவ செலவு, மருந்து, மாத்திரைக்கான செலவை ஈடுகட்டவும், குடும்பத்தின் பொருளாதார சுமையை தாங்கிப் பிடிப்பதில் ஓரளவு பங்கெடுக்கவும் பென்ஷன் தொகை, பேருதவியாக பலருக்கும் இருந்து வருகிறது. பென்ஷன் வந்து சேராமல் போனால்... விரக்தியின் விளிம்பிற்கே சென்று விடுவர். இவர்களது மன உளைச்சலை போக்கும் பணியை செய்து வருகிறார், சுந்தரம் என்ற பென்ஷனர். நீலகிரியில் உள்ள மத்திய அரசின் படைக்கள தொழிற்சாலையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். கோவை, திருப்பூர், நீலகிரி என பல்வேறு இடங்களில் வசிக்கும் பென்ஷனர்களின் குறையை நிவர்த்தி செய்து வருகிறார். மத்திய அரசு துறை சார்ந்த பென்ஷன் என்பதால், திடீரென பென்ஷன் தடைபடும் போது, செய்வதறியாது திகைக்கின்றனர் பென்ஷனர்கள். அதற்கான காரணம் புரியாமல், தெளிவு கிடைக்காமல், என்ன செய்வதென்று புரியாத பலரும், சுந்தரத்தை தொடர்பு கொள்கின்றனர். குழப்பத்துக்கு தீர்வு
பென்ஷனர்களின் விவரம், அவர்கள் ஆண்டுக்கொரு முறை சமர்பிக்க வேண்டிய வாழ்நாள் சான்று, ஆதார் எண், தொடர்பு எண் என அனைத்தும் முழுமைப் பெற்றதாக இருந்தால் மட்டுமே, பென்ஷன் விடுவிக்கப்படும் என்ற சூழலில், 'எப்படி இதை சரி செய்வது?' என்ற குழப்பம் பென்ஷனர்கள் மத்தியில் எழுகிறது. இத்தகைய பிரச்னைக்கான காரணத்தை சரியாக அறிந்து, இ-மெயில் வாயிலாகவே துறை அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று, சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள், கடித போக்குவரத்தை இ-மெயில் வாயிலாக அனுப்பியும், அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசியும், விதிமுறைக்கு உட்பட்டு, பென்ஷனர்களின் குறைகளை நிவர்த்தி செய்து, அவர்கள் வங்கிக்கணக்கில் பென்ஷன் தொகை வந்து சேரும் படி செய்து வருகிறார். எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் இவரது சேவையால், ஏராளமான பென்ஷனர்கள் பயன்பெற்று வருகின்றனர். ஆத்ம திருப்தி கிடைக்கிறது எனது பென்ஷன் பதிவேட்டில் சில குறைபாடுகள் இருந்தன; ஓராண்டு காலம் மிகுந்த சிரத்தைக்கிடையில், துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பு, ஆலோசனையின்படி சரி செய்தேன். என்னை போன்று, வேறு சிலரும் ஓய்வூதியம் பெறுவதில் நிர்வாக ரீதியான சில சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர் என்பதை அவர்கள் சொல்லக் கேட்டு, அதிகாரிகளின் கவனத்துக்கு இ-மெயில் வாயிலாகவும், தொலைபேசி அழைப்பு வாயிலாகவும் பேசி சரி செய்து கொடுத்தேன். எங்களின் நம்பகத்தன்மையை புரிந்து, அதிகாரிகளும் குறைகளை நிவர்த்தி செய்து தருகின்றனர். இதையறிந்து பலரும் என்னை அணுக, 'சிஎப்ஏ பென்ஷனர்ஸ் வெல்பேர் போரம்' உருவானது. துவக்கத்தில், 50, 60 வரை மட்டுமே உறுப்பினர்களாக இருந்தனர்; தற்போது, அந்த எண்ணிக்கை, 300ஐ கடந்திருக்கிறது. இந்த சேவை, ஒரு ஆத்ம திருப்தியை தருகிறது. - சுந்தரம், தலைவர், சிஎப்ஏ பென்ஷனர்ஸ் வெல்பேர் போரம்.