உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மக்களிடம் உற்சாகம்! ஷாப்பிங் பரபரப்பு: நெரிசல் அதிகரிப்பு

தீபாவளி பண்டிகை நெருங்குவதால் மக்களிடம் உற்சாகம்! ஷாப்பிங் பரபரப்பு: நெரிசல் அதிகரிப்பு

திருப்பூர்: பனியன் தொழில் சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சாலைகளில், 95 சதவீதம் போனஸ் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது; அதிகளவு மக்கள் 'ஷாப்பிங்' செய்ய வருவதால், நகரப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளது. திருப்பூர் சுற்றுப்பகுதிகளில், 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஏற்றுமதி நிறுவனங்களும், 3 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. நேரடியாகவும், மறைமுகமாகவும், எட்டு லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பனியன் தொழிலால் பயனடைந்து வருகின்றனர். அவர்களில், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டும், இரண்டு லட்சத்துக்கும் அதிகம் என கணக்கிடப்பட்டுள்ளது. பனியன் ஏற்றுமதி துவங்கிய நாளில் இருந்தே, தீபாவளி பண்டிகையும், போனஸ் பட்டுவாடாவும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. வாரந்தோறும் சம்பளம் வாங்கி குடும்பம் நடத்தி வரும் தொழிலாளர் குடும்பங்கள், போனஸ் தொகையை வருடாந்திர சேமிப்பு தொகை போல் கருதி, குடும்பத்துக்கு தேவையான செலவுகளை செய்கின்றனர். அந்தவகையில், ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும் போனஸ் பட்டுவாடா எதிர்பார்ப்பு அதிகரிக்கிறது. திருப்பூரை பொறுத்தவரை, கடந்த, 11ம் தேதி முதல், போனஸ் பட்டுவாடா துவங்கிவிட்டது. நீண்ட நாள் நிலுவை தொகையை பெற்று, ஜாப் ஒர்க் நிறுவனங்களும், தங்களது தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடாவை துவக்கியுள்ளன. நேற்றைய நிலவரப்படி, பெரும்பாலான தொழிலாளருக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ளது. அதன் எதிரொலியாக, திருப்பூரை சுற்றியுள்ள, 20 கி.மீ., சுற்றளவில் வசிக்கும் மக்கள், நகரப்பகுதிக்கு வந்து, ஜவுளி எடுத்து செல்கின்றனர். அதிரடியான பரிசு பொருட்களும் வழங்குவதால், உற்சாகமாக புத்தாடைகளுடன், பாத்திரங்களையும் எடுத்துச்செல்கின்றனர். பர்னிச்சர், எலக்ட்ரானிக்ஸ், மொபைல் போன் மட்டுமல்ல, நகை வாங்கவும் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. ஆண்டு முழுவதும், நகைச்சீட்டு செலுத்தி வரும் வாடிக்கையாளர்கள், தீபாவளி போனஸ் தொகையையும் சேர்த்து, தங்களது சேமிக்கு ஏற்ப நகை வாங்குவதும் அதிகரித்துள்ளது. வீட்டுக்கு தேவையான பொருட்கள் விற்கும் கடைகள், பனியன் ஆடைகள் விற்கும் கடைகள், உள்ளாடைகள் விற்பனை களைகட்டியுள்ளது. அத்துடன், நாளை முதல் பட்டாசு கடை மற்றும் பலகாரம் விற்கும் கடைகளிலும் விற்பனை களைகட்டும்; ஒவ்வொரு கடையும், தீபாவளி விற்பனைக்காக தயாராகிவருகின்றனர். அருகிலுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், அதிக அளவு திருப்பூர் வந்து செல்வதால், நகரப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ரோடுகளில், மக்கள் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. இதனால், போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர் சொந்த ஊர் பயணம்

பனியன் தொழில் நிமித்தமாக, வேலை வாய்ப்பு தேடி வந்த மக்கள், திருப்பூரிலேயே நிரந்தரமாக தங்க துவங்கிவிட்டனர். இருப்பினும், தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதையே விரும்புகின்றனர். நடுத்தர வயதுக்கு மேற்பட்டவர்கள், தீபாவளிக்கு சென்றால், அங்குள்ள நிலத்தில் விவசாயம் செய்துவிட்டு, பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு திரும்புவது வழக்கம். இந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு மூன்று நாள் விடுமுறை. கடந்த இரண்டு மாதமாக பரபரப்பாக இயங்கியதால், பனியன் நிறுவனங்கள், 8 நாள் வரை விடுமுறை அறிவித்துள்ளன. எனவே, வரும், 19ம் தேதி முதல், 26ம் தேதி வரை பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. இதனால், வெளிமாவட்டங்களை சேர்ந்த குடும்பத்தினர், முன்கூட்டியே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்ல துவங்கிவிட்டனர். வடமாநில தொழிலாளர்கள் பெரும்பாலும் தீபாவளி பண்டிகைக்கு செல்வதில்லை; திருப்பூரிலேயே கொண்டாடுகின்றனர். இதனால், அவசர ஆர்டர்கடள, உள்ளூர் மற்றும் வடமாநில தொழிலாளர்களை வைத்து பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளதாக, பனியன் நிறவன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி