உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  கோவைக்கு மாற்று வழித்தடம் பஸ்கள் இன்றி மக்கள் தவிப்பு

 கோவைக்கு மாற்று வழித்தடம் பஸ்கள் இன்றி மக்கள் தவிப்பு

பல்லடம்: பல்லடத்தில் இருந்து கோவை செல்வதற்கான மாற்று வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படாததால், வழியோர கிராம மக்கள் தவிக்கின்றனர். பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் வழியாக கோவை, உக்கடம் செல்ல நெடுஞ்சாலை உள்ளது. பல ஆண்டுகளாக அரசு போக்குவரத்து கழகம் இதைப் பயன்படுத்துவதில்லை. பல்லடத்தில் இருந்து பணிக்கம்பட்டி, கே.அய்யம்பாளையம், கரடிவாவி, செலக்கரிச்சல், சித்தநாயக்கன்பாளையம், பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம், செட்டிபாளையம், போத்தனுார் வழியாக, உக்கடம் வரை செல்லும் இந்த சாலை, கொச்சி செல்லும் பைபாஸ் சாலையையும் இணைக்கிறது. ஈச்சனாரி, மலுமிச்சம்பட்டி, சுந்தராபுரம், போத்தனுார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில், ஏராளமான கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளன. பல்லடத்தில் இருந்து செட்டிபாளையம் வழியாக கோவைக்கு பஸ் இயக்கினால், பல்வேறு கிராமங்களில் வசிக்கும், ஊழியர்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவியர் உள்ளிட்டோர் பயனடைவர். தேவையற்ற அலைச்சல் குறைவதுடன், நேர விரயமும் ஆகாது. போக்கு வரத்து நெரிசல் மிகுந்த சூலுார், சிங்காநல்லுார் வழியாக கோவை செல்வதற்கான மாற்று வழித்தடமாக இது உள்ளது. அரசு போக்குவரத்து கழகம் பல ஆண்டு காலமாக இந்த வழித்தடத்தில் பஸ் இயக்காமல் உள்ளது. எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனும் கூட, இந்த வழித்தடத்தில் பஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். கிராம மக்களும் இது தொடர்பாக, அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு மனு அளித்திருந்தனர். ஆனால், இன்றுவரை, போக்குவரத்து கழகம் இந்த முக்கிய நெடுஞ்சாலையை புறக்கணித்தே வருகிறது. பொதுமக்களின் நலன் கருதி, இந்த வழித்தடத்தில் பஸ்கள் இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை