நகராட்சி ஆதார் மையத்தில் அலைகழிக்கப்படும் மக்கள்; மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தணும்
உடுமலை: உடுமலை நகராட்சி வளாகத்திலுள்ள, ஆதார் மையம் முறையாக செயல்படாததால், பொதுமக்கள் அலைகழிக்கப்படுகின்றனர். உடுமலை நகராட்சி வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் மையத்திற்கு, நகரப்பகுதியிலிருந்து, தினமும் நுாற்றுக்கணக்கான மக்கள், புதிய பதிவு மற்றும் திருத்தப்பணிகளுக்கு வருகின்றனர். இங்குள்ள ஆதார் மையத்தில் முறையான பணியாளர்கள் நியமிக்காததோடு, பணியில் இருக்கும் நபரும் ஒரு சில நாட்கள் மட்டுமே பணிக்கு வருகிறார். பெரும்பாலும் நகராட்சியிலுள்ள ஆதார் மையம் பூட்டியே கிடக்கிறது. திறந்திருக்கும் நேரத்திலும், குறைந்த நபர்களுக்கு மட்டுமே பதிவு மேற்கொள்ளப்படுகிறது. அதே போல், முறையாக ஆவணங்கள் கொண்டு வந்திருந்தாலும், பணியில் இருக்கும் நபர், மக்களை அலைக்கழிப்பதோடு, லஞ்சமாக பணமும் பெறுவதாக, நகர மன்ற கூட்டத்திலேயே குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது பள்ளிக்குழந்தைகளுக்கு, ஆதார் பதிவு புதுப்பிக்க அறிவுறுத்திய நிலையில், தினமும் ஏராளமான பள்ளி குழந்தைகளை பெற்றோர்கள் அழைத்து வருகின்றனர். ஆதார் புதுப்பிக்க பல நாட்கள் காலதாமதம் ஆவதால், பள்ளி குழந்தைகளின் படிப்பு பாதிப்பதோடு, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்க முடியாமல், பெரும் சிக்கல் ஏற்படுகிறது. அதே போல், வங்கிக்கணக்கு, ரேஷன் கார்டுகளில் கைரேகை பதிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்கு வரும் பொதுமக்களும், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஆதார் மையம் பூட்டிக்கிடப்பது மற்றும் ஆவணங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக அலைக்கழிப்பது என, பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். மேலும், ஆதார் மையம் முறையாக பராமரிக்காத நிலையில், மேற்கூரை உடைந்து விழுந்து வருகிறது. உள்ளே அமர்ந்திருக்கும் மக்களும், குழந்தைகளும் பாதிக்கும் நிலை உள்ளது. போதிய இருக்கை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஆதார் மையத்தில் இல்லாததால், கடும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, நகராட்சி வளாகத்திலுள்ள ஆதார் மையத்தில் பராமரிப்பு மேற்கொள்ளவும், தேவையான பணியாளர்களை நியமிக்கவும், முறையாக செயல்படவும், பொதுமக்களுக்கு கனிவுடன் உரிய பணிகளை மேற்கொள்ளவும், திருப்பூர் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.