ரோட்டோரம் கொட்டி கிடந்த கழிவு மூட்டை :கேரள மருத்துவ கழிவுகள் என மக்கள் அச்சம்
திருப்பூர்: திருப்பூர் அருகே ஒதுக்குப்புறமான பகுதியில் மூட்டை மூட்டையாக கழிவுகள் கொட்டப்பட்டுக் கிடந்தது. கேரள மருத்துவ கழிவுகளாக இருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியத்தில் சிறுகிணறு கிராமம் உள்ளது. இங்கு தாராபுரம் - ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள சரவணா தோட்டம் அருகே, நேற்று காலை மூட்டை மூட்டையாக பல வண்ண பைகளில் கட்டப்பட்ட கழிவுகள் வீசப்பட்டுக் கிடந்தது. அதனருகே கடும் துர்நாற்றம் வீசியதோடு, ஏராளமான பயன்படுத்திய 'மாஸ்க்'குகள் இறைந்து கிடந்தது. ஈ மற்றும் எறும்புகள் அதிகளவில் அதில் மொய்த்துக் கொண்டிருந்தது. இதனையறிந்த பொதுமக்கள், அதிர்ச்சியடைந்தனர். கேரள மாநிலத்திலிருந்து மருத்துவ கழிவு மூட்டைகளை லாரியில் கொண்டு வந்து கொட்டி சென்றுள்ளனர். இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், மூட்டைகளை வீசிச் சென்றுள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர். தகவலின் பேரில், ஒன்றிய துணை பி.டி.ஓ., கதிர்வேல், சுகாதார ஆய்வாளர் சிவகுமார், ஊதியூர் போலீசார், கழிவு மூட்டைள் கிடந்த பகுதிக்கு சென்று விசாரித்தனர். 'இது குறித்து போலீசில் புகார் செய்து, கழிவுகளை கொட்டிச் சென்ற வாகனம், அனுப்பிய நிறுவனம் ஆகியன குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்; கழிவு மூட்டைகளை அவர்கள் மூலமே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,' அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து, குண்டடம் பி.டி.ஓ., ரமேஷ் கூறியதாவது: சிறு கிணறு கிராமத்தில் கொட்டப்பட்ட கழிவுகள் ஏதேனும் உணவு பொருள் உற்பத்தி நிறுவனத்தின் கழிவுகளாக இருக்கலாம்; நம் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த நிறுவனமாக இருக்க வாய்ப்பு குறைவு. வெளி மாநிலத்திலிருந்து தான் வந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. நிச்சயம் மருத்துவ கழிவு இல்லை. இருப்பினும் எவ்வகையான கழிவாக இருந்தாலும் அதனை முறைப்படி அழிக்க வேண்டும். இதுபோல், பொது இடத்தில் வீசுவது தவறு. விசாரணை செய்து கழிவுகளை வீசி சென்ற நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.