கடை வீதிகளில் மக்கள் வெள்ளம்
திருப்பூர், : ஆயுத பூஜை கொண்டாட பூஜைப்பொருட்களை வாங்க திருப்பூர் கடைவீதிகளில் பொதுமக்கள் நேற்று திரண்டனர்.இன்று ஆயுத பூஜை; சரஸ்வதி பூஜை; நாளை விஜயதசமி; திருப்பூரில் உள்ள கடைவீதிகளில் நேற்று பூ, பழம், பொரி உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலை அதிகரித்திருந்தது. சாலைகள் வாகன நெரிசலுடன் காணப்பட்டன.ஆயுத பூஜை, விஜயதசமி, ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை காரணமாக, திருப்பூரில் இருந்து சொந்த ஊர்களுக்கு தொழிலாளர் பலரும் பயணமாகியுள்ளனர். நேற்று இரவு முதல் பஸ் ஸ்டாண்டுகளில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.திருப்பூர், தாராபுரம் ரோடு, கோவில்வழி பஸ் ஸ்டாண்டில் இருந்து தென் மாவட்டங்களுக்கு, 35 பஸ்கள், மத்திய பஸ் ஸ்டாண்டில் இருந்து, சேலம், திருவண்ணாமலை, சென்னை உள்ளிட்ட பகுதிக்கு, 15 பஸ், திருப்பூர், புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிக்கு, 15 பஸ்கள் என மொத்தம், 65 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.'பெரும்பாலான சிறப்பு பஸ்கள் இயக்கம் இரவு, 11:00 மணிக்கு முன்பாக முடிவதால், வெளியூர் செல்வோர் முன்பாகவே பஸ் ஸ்டாண்ட் வந்து தங்கள் இருக்கைகளுக்கு பூர்த்தி செய்து கொள்ளலாம்,' என, திருப்பூர் மண்டல போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.