துாய்மையான குடிநீர் கேட்கும் மருதுரையான் வலசு மக்கள்
திருப்பூர்; திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், பொங்கலுார் ஒன்றியம், கண்டியன் கோவில் ஊராட்சி மருதுரையான் வலசு பகுதி மக்கள் மனு அளித்தனர். அவர்கள் கூறியதாவது:மருதுரையான் வலசில், 500 வீடுகள் உள்ளன. 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியிலிருந்து தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. தொட்டி கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கும் மேலான மேல்நிலை தொட்டி, சிதிலமடைந்து, தண்ணீர் கசிந்து கொண்டிருக்கிறது. அருகிலேயே வீடுகள் உள்ளநிலையில், எந்நேரம் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அச்சம் ஏற்பட்டுள்ளது. தொட்டியை உடனடியாக இடித்து அகற்ற வேண்டும்.குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்படும் ஆழ்துளை கிணற்றுநீரில், உப்புத்தன்மை அதிகம் உள்ளது. இந்நீரை தொடர்ந்து பயன்படுத்தும் மக்களுக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படுகிறது. பாதுகாப்பான குடிநீர் வினியோகிக்கவும், அத்திக்கடவு திட்ட தண்ணீர் கிடைக்கச் செய்யவும், கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.