ஊராட்சியை பசுமையாக்க களம் இறங்கிய மக்கள்: வனத்துக்குள் திருப்பூரில் மரக்கன்று நடவு
உடுமலை: வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தின் கீழ், ஊராட்சியை பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. பசுமை பரப்பை அதிகரிக்கும் வகையில், வனத்துக்குள் திருப்பூர் திட்டம், கடந்த 10 ஆண்டுகளாக 'வெற்றி' அமைப்பு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 11வது ஆண்டாக நடப்பாண்டு, 3 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்து, பராமரிக்கும் இலக்குடன் துவங்கப்பட்டு, தற்போது வட கிழக்கு பருவமழையை தொடர்ந்து பணிகள் தீவிரமடைந்துள்ளது. கடந்த, மார்ச் துவங்கிய, 11வது திட்டத்தில், மாவட்டம் முழுவதும் நேற்று வரை, 2 லட்சத்து, 29 ஆயிரத்து, 523 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து, மரக்கன்றுகள் நடவு செய்து பசுமை வளர்க்கும் பணியில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதி விவசாயிகள் மற்றும் பசுமை ஆர்வலர்கள் ஆர்வம் காட்டி வருவதால், உடுமலை பகுதியில், 96 ஆயிரத்து, 875 மரக்கன்றுகள் நடவு செய்யபட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், மாவட்ட எல்லையான கூலநாயக்கன்பட்டி ஊராட்சியை பசுமையாக்கும் வகையில், பொதுமக்கள் இணைந்து, ஊராட்சிக்கு சொந்தமான இடங்களில், 150 புங்கன், 100 சொர்க்கம், 75 இலுப்பை, 25 பூச்சிக்கொட்டை மற்றும் 50 புளி என, 400 மரக்கன்றுகள் நடவு செய்தனர். ஊராட்சியை சேர்ந்த சந்திரசேகரன், முரளிதரன் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். அதே போல், மரச்சாகுபடி திட்டமாக, பசுமை வளர்ப்பு மற்றும் வருவாய் என்ற அடிப்படையில், உடுமலை மானுப்பட்டியை சேர்ந்த குணசேகர், விவசாய நிலத்தில், 200 மகா கனி மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், பொது இடங்கள், பள்ளி, கல்லுாரி, கோவில் வளாகங்களில் மரக்கன்றுகள் நடவு செய்து மரமாகும் வரை பராமரிக்க ஆர்வம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.