உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மனுக்களுக்கு தீர்வு கண்டால் மக்கள் மனம் குளிரும்

மனுக்களுக்கு தீர்வு கண்டால் மக்கள் மனம் குளிரும்

திருப்பூர்,; குறைகேட்பு கூட்டத்தில் தாங்கள் அளிக்கும் மனுக்களை, துறை சார்ந்த அரசு அலுவலர்கள் வழக்கம்போல் வாங்கி வைத்துக்கொள்ளாமல், உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.மாவட்ட அளவிலான குறைகேட்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமை வகித்தார். கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மகாராஜா, தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பக்தவத்சலம் ஆகியோர், பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனர். அம்மனுக்கள், உரிய நடவடிக்கை எடுப்பதற்காக, துறை சார்ந்த அரசு அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பொங்குபாளையத்துக்குபஸ் வசதி இல்லை

பொங்குபாளையம் பகுதி மக்கள் அளித்த மனு:பொங்குபாளையம் கிராமத்தில், இரண்டாயிரம் குடும்பங்கள் வசிக்கிறோம். எங்கள் பகுதிக்கு போதிய பஸ் வசதி இல்லை. காலை, மாலை இரண்டு வேளை இயங்கிவந்த 10ம் நம்பர் பஸ், கொரோனாவுக்குப்பிறகு நிறுத்தப்பட்டுவிட்டது. மாணவர்கள், சரியான நேரத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்லமுடியவில்லை. தொழிலாளர்களும் சிரமப்படுகின்றனர். எங்கள் பகுதிக்கு மீண்டும் பஸ் இயக்கவேண்டும்.

மாஜி ராணுவ வீரர்மனைவி கண்ணீர்

முன்னாள் ராணுவ வீரர் கோபாலகிருஷ்ணன் மனைவி சாந்தி, கண்ணீர் மல்க அளித்த மனு:கணவருக்கு அரசு சார்பில் 1.25 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டது. இந்த நிலத்தை, மகன் பெயரில் மாறுதல் செய்வதற்காக, தடையின்மை சான்று தேவைப்பட்டது. வி.ஏ.ஓ., ஒருவர், தானே தடையின்மை சான்று பெற்றுத்தருவதாக கூறி, நில ஆவணங்களை பெற்று வைத்துக்கொண்டார். நில உடமை சான்று மற்றும் நிலத்தை மீட்டுக்கொடுக்கவேண்டும்.

இலவச பட்டாமக்கள் மனு

பட்டா வழங்க கோரி மனு அளித்த குன்னத்துார் பகுதி மக்கள் கூறியதாவது:ஊத்துக்குளி தாலுகா, குன்னத்துாரில் சந்தை கடைக்கு எதிரே, நத்தம் புறம்போக்கு நிலத்தில், 50 குடும்பங்கள் மூன்று தலைமுறையாக வசித்துவருகிறோம். இதே இடத்தில் பட்டா வழங்க கோரி பலமுறை மனு அளித்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை.மின் இணைப்பு, குடிநீர் என, அடிப்படை வசதிகளும் கூட செய்துதரவில்லை. நாங்கள் வசிக்கும் பகுதியிலேயே இலவச வீட்டுமனை பட்டா வழங்கவேண்டும். போதிய அடிப்படை வசதிகள் செய்துதரவேண்டும்.

நடந்தது கொலையா?விசாரணை தேவை

சமூக நீதி மக்கள் கட்சியினர் அளித்த மனு:தாராபுரம் தாலுகா, சென்னாக்கல்பாளையத்தில், முருகன், 42, என்பவர், கடந்த ஜூன் 26ம் தேதி, தோட்டத்து வேப்பமரத்தில் துாக்கில் தொங்கிய நிலையில், பிணமாக மீட்கப்பட்டார். காசநோய் பாதிப்பால் மனமுடைந்து, தற்கொலை செய்ததாக அலங்கியம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது உடலை அவசர அவசரமாக எரித்துவிட்டனர்.10 அடிக்கு மேல் உயரமான மரத்தில், இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில், முருகன் துாக்கில் தொங்கியது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. யாரோ சிலர், அவரை அடித்து கொலை செய்து, துாக்கில் தொங்கவிட்டதாக தெரியவருகிறது. முருகன் சாவில் மர்மம் உள்ளதால், போலீசார் முறையாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இ.எஸ்.ஐ., மருத்துவமனைமுழு செயல்பாடு தேவை

நாம் தமிழர் தொழிற்சங்க பேரவைமாநில இணைச்செயலாளர் சுரேஷ்பாபு அளித்த மனு:திருப்பூரில், பூலுவப்பட்டி ரிங் ரோட்டி லுள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கடந்த ஆண்டு, பிப். மாதம் முதல் செயல்படத்துவங்கியுள்ளது. போதிய மருத்துவ கருவிகளை நிறுவியும், மருத்துவர்களை நியமித்தும், இ.எஸ்.ஐ., மருத்துவமனையை முழு செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

திரும்ப வழங்கப்படாதபோக்கிய தொகை

பல்லடம் கணபதிபாளையத்தை சேர்ந்த ரோகிணி அளித்த மனு:பல்லடம் பெத்தாம்பாளையத்தில், ஐந்து குடும்பங்கள் போக்கியத்துக்கு வீடு பெற்று, குடியிருந்துவருகிறோம். இதற்காக, ஒவ்வொரு குடும்பத்தினரும், 2 லட்சம், 8 லட்சம் என, மொத்தம் 20 லட்சம் ரூபாய் போக்கிய தொகையை, வீட்டு உரிமையாளரிடம் வழங்கியுள்ளோம்.வீட்டு உரிமையாளர், வீட்டை அடமானம் வைத்துள்ளார். உரிய தொகையை செலுத்தாததால், வீடு ஜப்திக்கு வந்துள்ளது. போக்கிய காலம் முடிந்தநிலையில், உரிமையாளர் எங்களுக்கான தொகையை திரும்ப வழங்கவில்லை. பைனான்ஸ் நிறுவனத்தார், ஜப்தி செய்வதற்காக, எங்களை வீட்டை காலி செய்ய கட்டாயப்படுத்துகின்றனர். எங்களுக்கு உரிய போக்கிய தொகையை, வீட்டு உரிமையாளரிடமிருந்து பெற்றுத்தரவேண்டும்.

இலவச பட்டா கோரிதிரண்ட மக்கள்

பொங்கலுார் ஒன்றியம், வே. வாவிபாளையம் ஊராட்சி, பழனி கவுண்டம்பாளையம் பகுதி மக்கள் திரண்டுவந்து, இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி மனு அளித்தனர்.

தீர்வு காணப்படுமா?

நேற்றைய முகாமில், பொதுமக்களிடமிருந்து மொத்தம் 588 மனுக்கள் பெறப்பட்டன.நேற்றைய நிலவரப்படி, பொதுமக்களால் அளிக்கப்பட்ட, வெவ்வேறு துறை சார்ந்த மொத்தம் 3800 மனுக்கள் நிலுவையில் உள்ளது. இவற்றில், 1 முதல் 3 மாதங்களுக்கு உட்பட்டவை, 1,754 மனுக்கள்; 15 நாட்களுக்கு உட்பட்டவை, 1,153 மனுக்கள்; 30 நாட்களுக்கு உட்பட்டவை, 766 மனுக்கள்; மூன்று முதல் 6 மாதத்துக்கு உட்பட்ட 5 மனுக்கள்; 6 மாதம் முதல் ஓராண்டாகியும் தீர்வு காணப்படாதவை 121 மனுக்கள்.குறைகேட்பு கூட்டத்தில் அளிக்கப்படும் மனுக்கள் மீது, துறை சார்ந்த அதிகாரிகள் விரைந்து தீர்வு காண, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.சோதனை அதிகரிப்புகுறைகேட்பு கூட்டத்தில், மூன்றடுக்கு சோதனையை போலீசார் நடைமுறைப்படுத்தியுள்ளனர். கலெக்டர் அலுவலக வளாகத்தினுள், குறைகேட்பு கூட்ட அரங்கிற்கு செல்லும் வழியில், ரோட்டின் இருபுறமும் தடுப்புகளை வைத்து, பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். எதற்காக வந்துள்ளனர்; எத்தனை பேர் வந்துள்ளனர் என்கிற விவரங்களையெல்லாம் கேட்டு பெற்றபின்னரே, போலீசார், போதுமக்களை உள்ளே அனுமதித்தனர்.தனியார் மனமகிழ் மன்றம் அமைப்பதை தடுத்து நிறுத்தக்கோரி சுல்தான் பேட்டை பகுதி மக்கள், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அம்மக்கள் கூறியதாவது:மங்கலம், சுல்தான்பேட்டை பகுதியில் ஆயிரம் குடும்பங்கள் வசித்துவருகிறோம். எங்கள் பகுதியில் ஏற்கனவே, குடியிருப்பு பகுதிகளுக்கு இடையூறாக டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டுவருகிறது.இந்நிலையில், ஆண்டிபாளையம் அருகே, படகு குழாம் பகுதியில், தனியார் மனமகிழ் மன்றம் என்கிற பெயரில், பார் அமைக்க முயற்சித்து வருகின்றனர். அருகாமையிலேயே விநாயகர் கோவில், அரசு பள்ளி அமைந்துள்ளன. பெண்கள், பள்ளி குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், அப்பகுதியில் மதுக்கடை அமைக்கக்கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ