நிதி ஒதுக்கியும் துவங்காத பணி; மக்கள் முற்றுகை
அனுப்பர்பாளையம்,; திருப்பூர் மாநகராட்சி, 16வது வார்டு, விகாஸ் ஸ்கூல் வீதியில் 50 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.வீதியில் உள்ள சாக்கடை கால்வாய் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால், உடைந்து சிதைந்து போய் உள்ளது.கழிவுநீர் சாக்கடை கால்வாயை விட்டு வெளியேறி வீட்டுக்குள் புகுந்து விடுகிறது.சாக்கடை கால்வாயை புதுப்பிக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சியில் முறையிட்டதை தொடர்ந்து, இரண்டாவது மண்டலம் சார்பில், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் பணி தொடங்கவில்லை.ஆவேசம் அடைந்த பொதுமக்கள் வார்டு கவுன்சிலர் தமிழ்ச்செல்வி தலைமையில் நேற்று காலை மாநகராட்சி இரண்டாவது மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு மாநகராட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். இவர்களுக்கு ஆதரவாக அ.தி.மு.க., வார்டு செயலாளர்கள் கணகராஜ், விஜயகுமார், ரங்கசாமி ஆகியோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அலுவலகத்தில் தலைவர் மற்றும் உதவி கமிஷனர் இல்லாததால், உதவி பொறியாளர் சுரேஷ், பேச்சுவார்த்தை நடத்தினார்.'உதவி கமிஷனர் வர வேண்டும். அவர் வரும் வரை இங்கிருந்து, செல்ல மாட்டோம்' என அலுவலக நுழைவு வாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநகராட்சி செயற்பொறியாளர் அலாவூதீன் பேச்சுவார்த்தை நடத்தினார்.'பணி உத்தரவு வழங்கப்பட்டுவிட்டது; நாளை முதல் பணி தொடங்கும்' என உறுதியளித்தார். அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.