உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கு அனுமதி; அதிருப்தியடைந்த விவசாயிகள் போராட்டம்

உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கு அனுமதி; அதிருப்தியடைந்த விவசாயிகள் போராட்டம்

உடுமலை; உடுமலை உழவர் சந்தையில், வியாபாரிகளுக்கு இடம் கொடுப்பதைக்கண்டித்து, விவசாயிகள் கடைகள் அமைக்காமல், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை உழவர் சந்தையில், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் சுற்றுப்புற பகுதியிலிருந்து, விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை, உடுமலை உழவர் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். 183 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.இங்கு, விவசாயிகள் அல்லாதவர்கள், முறைகேடாக ஆவணங்கள் தயாரித்தும் வியாபாரிகள் ஆதிக்கம் செலுத்தி வருவதாக கூறி, விவசாயிகள் நேற்று கடைகளில் காய்கறிகளை விற்பனை செய்யாமல், புறக்கணிப்பு செய்ததோடு, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விவசாயிகள் கூறியதாவது:ஊட்டி தேயிலை விற்பனைக்கு அனுமதி பெற்ற, விவசாயிகள் கூட்டுப்பண்ணையம் நிறுவனம் பெயரில், உடுமலையைச்சேர்ந்த வியாபாரி, உள்ளூரில் விளையும், சின்னவெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விற்பனை செய்வதோடு, நுகர்வோர்களை கூவி, கூவி அழைத்து வியாபாரம் செய்து வருகிறார்.அரசு தரும் தராசை பயன்படுத்தாமல், சொந்த தராசும், அதிகாரிகள் நிர்ணயிக்கும் விலையை விட கூடுதலாக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இது குறித்து, விவசாயிகள் மற்றும் நுகர்வோர் வாயிலாக புகார் அளிக்கப்பட்டது.இதனையடுத்து, அதிகாரிகள் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட நபர், உழவர் சந்தையில் கடை அமைக்க தடை விதித்தது. ஆனால், அதிகாரிகள் உத்தரவை மீறி, சம்பந்தப்பட்ட நபர் ஆளும்கட்சியினர் பெயரை பயன்படுத்தி, அதிகாரிகளை மிரட்டி கடை அமைத்து, வியாபாரம் செய்து வந்தார்.இந்நிலையில், உயர் அதிகாரிகள் உத்தரவு என்ற அடிப்படையில், மீண்டும் அதே நபருக்கு கடை அமைத்து தந்துள்ளதோடு, நிலமே இல்லாத விவசாயி, விளையாத காய்கறிகளை வெளி மார்க்கெட்டில் வாங்கி வந்து விற்க அனுமதியளித்துள்ளனர்.அதே போல், உண்மையான விவசாயிகளுக்கு, தினமும் ஒரு கடை மாற்றித்தரும் அதிகாரிகள், சம்மந்தப்பட்ட நபருக்கு மட்டும், மாதம் முழுவதும் ஒரே கடை, கூடுதல் பரப்பளவில் ஒதுக்குகின்றனர்.இதனை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். உழவர் சந்தையில் வியாபாரிகளுக்கு தடை விதிக்கும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு, தெரிவித்தனர்.உழவர் சந்தை வேளாண் அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:ஊட்டி வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், தேயிலை விற்க கடை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு, காய்கறிகள் விற்பனை செய்த சபீனா என்பவர் விதி மீறியதால், விற்க தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனம் வாயிலாக, துணை இயக்குனர் வணிகத்திற்கு கடிதம் வழங்கபட்டதன் பேரில், உயர் அதிகாரிகள் உத்தரவு அடிப்படையில் மீண்டும் கடை ஒதுக்கப்பட்டுள்ளது.விவசாயிகளிடம் துணை இயக்குனர் பேச்சு நடத்தி, விரைவில் தீர்வு காணப்படும். 51 விவசாயிகள் காய்கறிகள் விற்பனை செய்தனர். நுகர்வோர்களும் வந்திருந்தனர்.இவ்வாறு, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

lana
பிப் 08, 2025 10:27

அவர் சிறுபான்மையினர் எனவே மடியல் அரசு அவருக்கு தான் support. ஓட்டு போட்ட பெரும்பான்மை சுரணை இல்லாத இந்து மக்கள் க்கு இது தேவையா