உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காட்டுப்பன்றி சுட்டுக் கொல்ல அனுமதி? திருப்பூர் மாவட்ட விவசாயிகள் நிம்மதி

காட்டுப்பன்றி சுட்டுக் கொல்ல அனுமதி? திருப்பூர் மாவட்ட விவசாயிகள் நிம்மதி

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதி விவசாயிகள், புதிய, பழைய அமராவதி பாசனம் மற்றும் கிணற்று பாசனத்தில், நெல், மக்கச்சோளம், தக்காளி, கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.மயில், காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகள், விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது. குறிப்பாக காட்டுப்பன்றிகளால், தாராபுரம் பகுதி விவசாயிகள் தினந்தோறும் அல்லல்பட்டுவருகின்றனர்.பயிர்கள் துளிர்விடும் பருவத்திலேயே சேதப் படுத்தும் காட்டுப்பன்றிகளால், விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.கேரளாவைப்போல், தமிழகத்திலும் காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல அரசு அனுமதி அளிக்கவேண்டும் என, விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நிலையில், காப்புக்காடுகளிலிருந்து ஒன்று முதல் மூன்று கி.மீ., தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால், வனத்துறையினர் சுட அனுமதி அளிக்கப்படுவதாக, அமைச்சர் பொன்முடி சட்டசபையில் தெரிவித்துள்ளார்.இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் பழனிசாமி கூறியதாவது:திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில், அலங்கியம், தாசநாயக்கன் பாளையம், மாந்தியாபுரம், தளவாய்பட்டணம், ஊத்துப்பாளையம், கொங்கனுார், சின்னபுத்துார், சென்னாகல்பாளையம் கிராமங்களில், அதிகளவில் காட்டுப்பன்றிகள் உலா வருகின்றன. காட்டுப்பன்றிகள், மக்காச்சோளம், நெற்பயிர்களை பால் பருவத்திலேயும், தென்னங்கன்றுகளை வேர்விடும் பருவத்திலேயே சேதப்படுத்துகின்றன.இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. விவசாயிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. ஸ்பீக்கர் மூலம், நாய் குரைப்பது, விசில் ஒலி எழுப்பி விரட்ட முயன்றாலும், பயனில்லை. பெருகி வரும் பன்றிகளால், விவசாயத்தையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறோம். எங்கள் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, காட்டுப்பன்றிகளை வனத்துறையினர் சுட்டுக்கொல்ல அரசு அனுமதி அளித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்ட வனத்துறையினர், பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை சுடுவதற்கு அரசு வழங்கிய அனு மதியை, நடைமுறைப்படுத்தி, வேளாண் பயிர் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி