உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வாயிலாக எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க திட்டம்

உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வாயிலாக எண்ணெய் உற்பத்தி அதிகரிக்க திட்டம்

திருப்பூர், : தென்மேற்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் திருப்பூர், ஊத்துக்குளி, அவிநாசி வட்டாரங்களில், மானாவாரி பயிராக கிட்டத்தட்ட, 9 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவர்.நடப்பாண்டு, தேசிய சமையல் எண்ணெய் வித்து இயக்க திட்டத்தின் வாயிலாக, ஊத்துக்குளி வட்டாரத்தில், 500 எக்டர் பரப்பளவில், மதிப்புக்கூட்டு சங்கிலித் தொடர் நிலக்கடலை தொகுப்பு திட்டம் வேளாண்மை துறை வாயிலாக செயல் படுத்தப்படுகிறது.இத்திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகளின் நிலங்களில் இருந்து, மண் மாதிரி எடுக்கும் முகாம் வடமுகம், காங்கயம்பாளையம், செஞ்சேரியம்பாளையம் மற்றும் எடையர்பாளையம் கிராமங்களில் நடைபெற்றது. தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்ட மாவட்ட ஆலோசகர் அரசப்பன், ஊத்துக்குளி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் மோகனசுந்தரம், வேளாண்மை அலுவலர் திவ்யா, துணை அலுவலர், உதவி அலுவலர்கள் மற்றும் அட்மா திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.ஊத்துக்குளி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கூறியதாவது: தேசிய சமையல் எண்ணெய் அபிவிருத்தி திட்டத்தின் மூலம், ஊத்துக்குளி வட்டாரத்தில், 20 எக்டருக்கும் அதிகமாக நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளப்படும் கிராமங்களில் இருந்து, 500 எக்டருக்கான விவசாயிகள் தேர்வு செய்து, மானியத்தில் நிலக்கடலை விதை வழங்கப் படுகிறது.அத்துடன் கோடை உழவு, மண் மாதிரி எடுத்தல், விதை நேர்த்தி, ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரித்து இடுதல் மற்றும் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு தொழில்நுட்பங்களை கையாண்டு விளைச்சல் பெறவும், உற்பத்தியாகும் காய்களை மதிப்புக்கூட்டு சங்கிலித் தொடர் பங்குதாரர் மற்றும் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் வாயிலாக கொள்முதல் செய்து எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை