பாப்பான்குளத்தில் பனை விதை நடவு
உடுமலை : மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை துறை வாயிலாக, காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பனை விதைகள் நடவு செய்யப்பட்டது.மடத்துக்குளம் வட்டாரத்தில், பனை மேம்பாட்டு இயக்கம் வாயிலாக, விவசாய நிலங்கள், குளம், குட்டை கரைகளில், 1,925 பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், விவசாயிகள், பசுமை அமைப்புகள் மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் வாயிலாக பனை விதைகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, மடத்துக்குளம், பாப்பான்குளம் கிராமம், விதைப்பண்ணை அருகில் உள்ள ஊராட்சி குளத்தில் தோட்டக்கலைத் துறை வாயிலாக, 100 பனை விதைகள் நடவு செய்யும் பணி நேற்று துவங்கியது.வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார், தோட்டக்கலை அலுவலர்கள் காவிய தீப்தினி, தாமோதரன், பூவிகா தேவி, ஊராட்சி தலைவர் நாச்சம்மாள், துணைத்தலைவர் பாலமுருகன் மற்றும் ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.