உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

மனைவியை தாக்கிய கணவன் கைது

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் லதா, 28. நான்கு ஆண்டுகள் முன், திருப்பூர் - வீரபாண்டியை சேர்ந்த முருகானந்தம், 38 என்பவரை திருமணம் செய்தார். மனைவிக்கு சொந்தமான, 15 சவரன் நகையை, கணவர் அடகு வைத்தார். நகையை மீட்டு தருமாறு, லதா கேட்டார். இந்நிலையில், கர்ப்பமான அவர் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டு, குழந்தையுடன் திரும்பினார். நகையை மீட்டு தருவது தொடர்பாக குடும்ப பிரச்னை ஏற்பட்டது. லதாவை கணவர் தாக்கினார். புகாரின் பேரில், கே.வி.ஆர்., நகர் மகளிர் போலீசார் கணவர் முருகானந்தம் மற்றும் குடும்பத்தினர் உட்பட, நான்கு பேர் மீது வழக்குபதிவு செய்து, கணவரை கைது செய்தனர்.

தொழிலாளியிடம் மொபைல்போன் பறிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் ரியாஸ், 23. புதிய பஸ் ஸ்டாண்டில் உள்ள 'டாஸ்மாக்' பாரில், சப்ளையராக பணியாற்றி வந்தார். வேலை முடித்து, பஸ் ஸ்டாண்டில் துாங்கி கொண்டிருந்தார். வாலிபர் ஒருவர் தகராறு செய்து, தாக்கி மொபைல்போனை பறித்து சென்றார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமி கர்ப்பம்; வாலிபரை தேடும் போலீஸ்

கிருஷ்ணகிரியை சேர்ந்தவர் ஜெயராம், 25. திருப்பூரில் தங்கி துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். அதே கடையில் வேலை செய்து வந்த, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். சிறுமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. பரிசோதனையில், சிறுமி, ஆறு வார கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. கே.வி.ஆர்., நகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து, வாலிபரை தேடி வருகின்றனர்.

சூதாட்ட கும்பல் சுற்றிவளைப்பு

வெள்ளகோவில் - கல்லாங்காட்டு வலசு திருமங்கலம் ரோட்டில் பழைய தகர கொட்டகையில் சட்டவிரோதமாக சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். துரைசாமி, 53, மணிகண்டன், 46 உட்பட, 30 பேரை போலீசார் கைது செய்து, 60 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

கல்லுாரி மாணவர் தற்கொலை

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, தொட்டிய மண்ணரையை சேர்ந்தவர் அபிஷேக், 18. சமீபத்தில் பிளஸ்2 முடித்து விட்டு, கடந்த, 11ம் தேதி தனியார் கல்லுாரியில் சேர்ந்தார். நேற்று வழக்கம் போல் பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்தார். மதியம் அவரது தாயார் வீட்டுக்கு வந்த போது கதவு திறந்தது. உள்ளே சென்று பார்த்த போது, அபிேஷக், வீட்டில் துாக்குமாட்டி இறந்து கிடந்தார். வீட்டில், தனது இறப்புக்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி வைத்திருந்தார். சடலத்தை கைப்பற்றி திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்

இளம்பெண் தற்கொலை

திருவாரூரை சேர்ந்தவர் நிவேதா, 20. திருப்பூர் அறிவொளி நகரில் தங்கி நிட்டிங் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, அறைக்கு சென்றார். நேற்று காலை கம்பெனி பூட்டிய நிலையில், திறக்கப்படாமல் இருந்தது. பணிக்கு வந்தவர் நிவேதாவை தேடி அறைக்கு சென்ற போது, அவர் துாக்குமாட்டி இறந்தது தெரிந்தது. திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை