உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தீபாவளி பாதுகாப்பு; போலீசுக்கு சபாஷ்

தீபாவளி பாதுகாப்பு; போலீசுக்கு சபாஷ்

திருப்பூர்: தீபாவளி வர்த்தகம் களைகட்டத் துவங்கும் நாட்களில், அதாவது, பண்டிகை நாளுக்கு முந்தைய ஓரிரு வாரங்கள், திருப்பூர் மாநகரம், போக்குவரத்து நெருக்கடியால் திக்குமுக்காடும். கடந்த ஆண்டு தீபாவளியின் போது, போலீஸ் கமிஷனராக இருந்த லட்சுமி, இதைக் களையும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொண்டார். இந் தாண்டு, இந்த நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக்கினார், தற்போதைய போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன். போக்குவரத்து ஸ்தம்பிக்கும் ரோடாக உள்ள குமரன் ரோட்டில், சில அடி துாரங்களுக்கு ஒரு போலீசார் வீதம் நிறுத்தி, உடனுக்குடன் வாகனங்களை கடந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்தார். பார்க் ரோடு, முனிசிபல் ரோடு என, முக்கிய இடங்களில் பாதசாரிகளுக்கான தடுப்புகள் அமைக்கப்பட்டன. தீபாவளிக்கு முந்தைய நாட்களில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. ஆம்னி பஸ்கள், பயணிகளை ஏற்றி செல்லும் இடமும் மாற்றப்பட்டிருந்தது. வாகனங்களை நிறுத்த புதிய மாநாட்டு மையம், எம்.ஜி.ஆர். சிலை அருகே புதிய பாலம், மாநகராட்சி அலுவலகம் அருகே என, போதுமான இட வசதி ஏற்படுத்தப்பட்டது. இடையூறு ஏற்படுத்தும் வகையில், தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துவது, இம்முறை பெரும்பாலும் தவிர்க்கப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாள் அதிகாரிகள் முதல் போலீசார் வரை பெரும்பாலானோர் ரோட்டில் களப்பணியில் முழுமையாக ஈடுபட்டனர். மக்கள் நிம்மதியாக சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய முடிந்தது. போலீசார் மட்டுமல்லாமல், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் போக்குவரத்து துறையினர் உள்ளிட்ட ஒவ்வொரு துறையினரின் நடவடிக்கையும் பாராட்டுக்குரியதாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை