திருட்டு - வழிப்பறி தடுக்க போலீசார் கண்காணிப்பு
பெருமாநல்லூர்: பெருமாநல்லுார் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில், தீபாவளி பண்டிகையையொட்டி போலீசார் பாதுகாப்பை அதிகப்படுத்தி உள்ளனர். இதற்காக, காலை மற்றும் மாலையில் பீட் போலீஸ் மூன்றில் இருந்து ஐந்தாகவும், அதுபோல் இரவு நேரத்தில் இரண்டு எஸ்.ஐ. தலைமையில் 6 பீட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். பெருமாநல்லுார் நால் ரோட்டில், கூட்டம் அதிகமாக காணப்படும். இதனால், திருட்டு, வழிப்பறி உட்பட குற்றங்களை தடுக்கும் வகையிலும் நால் ரோட்டில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, நால் ரோடு, பி.என்.ரோடு, கணக்கம்பாளையம் பிரிவு, நியூ திருப்பூர் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் ஒலி பெருக்கி அமைத்து உள்ளனர். இதில், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் நகைகளை கவனமாக பார்த்து கொள்ளவும், திருடர்கள் திசை திருப்பி பொருட்களை அபகரிக்க கூடும், பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்லும்போது, போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும்; திருட்டு, வழிப்பறி உள்ளிட்டவற்றில் இருந்து காத்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வை பொதுமக்களுக்கு போலீசார் ஏற்படுத்தி வருகின்றனர்.