மனைவிக்கு கொடுமை போலீஸ்காரர் கைது
திருப்பூர்: திருப்பூரில், மனைவியை அடித்து கொடுமைப்படுத்திய போலீஸ்கார கணவரை மகளிர் போலீசார் கைது செய்தனர்.திருப்பூர், ராம் நகரை சேர்ந்தவர் காமராஜ், 35; வேலம்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். முதலில் ஒரு பெண்ணை திருமணம் செய்து, கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தார். புதுவையை சேர்ந்த நந்தினி, 23 என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். கடந்த ஒரு ஆண்டாக மதுபோதையில் வீட்டுக்கு திரும்பும் அவர், மனைவியுடன் தகராறு செய்து வந்தார். மனைவி தரப்பில் போலீஸ் உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. காமராஜை உயரதிகாரிகள் அழைத்து அறிவுரை கூறி, எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இரு நாட்கள் முன்பு, மதுபோதையில் சென்ற அவர், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். மனைவி அளித்த புகாரின் பேரில், காமராஜ் மீது கொங்குநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர்.