ஓட்டுச்சாவடி மறு வரையறை
திருப்பூர்; ஓட்டுச் சாவடி மறுவரையறை குறித்த ஆலோசனைகூட்டத்தில், அரசியல் கட்சியினர், வாக்காளர் பட்டியல் முழுமைப்படுத்திய பின்னரே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர். திருப்பூர் தெற்கு தொகுதியில் உள்ள ஓட்டுச் சாவடிகளில், 1,200க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ள ஓட்டுச் சாவடிகளை பிரித்து புதிய ஓட்டுச் சாவடி அமைக்க, மறுவரையறை செய்யப்படவுள்ளது. இது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் நேற்று இரண்டாம் கட்ட ஆலோசனை நடந்தது. மாநகராட்சி கூட்டரங்கில், வாக்காளர் பதிவு அலுவலர் அமித் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. உதவி கமிஷனர் ராஜசேகர், தேர்தல் அலுவலர் மேகநாதன் முன்னிலை வகித்தனர். தெற்கு தொகுதியில், மறுவரையறை மேற்கொள்ள வேண்டிய 44 ஓட்டுச் சாவடிகள், அவை மாறுதல் செய்ய வேண்டிய மையங்கள் ஆகியன குறித்து விவாதிக்கப்பட்டது.கட்சி பிரதிநிதிகள் கூறியதாவது: ஒவ்வொரு தேர்தலின் போதும், ஓட்டுச் சாவடி வரையறைக்கான வரம்பு மாற்றப்படுகிறது. தற்போது, 1,400 ஓட்டுகள் உள்ளதாக கூறப்படும் பூத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின் போது நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் போது, ஓட்டு குறையும் நிலை உள்ளது. இதற்கு என்ன வகையில் தீர்வு எனத் தெரிய வேண்டும். பட்டியல் முழுமையாக இருந்தால் மட்டுமே இப்பணி நிறைவடையும். அனைத்து ஓட்டு சாவடிகளிலும் இறந்த வாக்காளர் பெயர்களை நீக்கும் பணி முழுமையாக உரிய வழிமுறைகளின்படி நடத்த வேண்டும். கட்சி பிரதிநிதிகள் பரிந்துரைக்கும் பெயர் நீக்க விவரங்களை பி.எல்.ஓ.,க்கள் நேரில் வந்து உறுதிப்படுத்தி நீக்கம் செய்ய வேண்டும். இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். பி.எல்.ஓ.,க்கள் கள ப் பணியில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.