உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இன்று வாக்குப்பதிவுக்கு ஓட்டுச்சாவடிகள் தயார்... தேர்தல் திருவிழா!ஜனநாயக கடமையாற்ற தவறாமல் வாக்களிப்போம்

இன்று வாக்குப்பதிவுக்கு ஓட்டுச்சாவடிகள் தயார்... தேர்தல் திருவிழா!ஜனநாயக கடமையாற்ற தவறாமல் வாக்களிப்போம்

உடுமலை:நாடு முழுவதும் முதற்கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்குட்பட்ட, சட்டசபை தொகுதிகளில், இன்று ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.உடுமலை சட்டசபை தொகுதியில், 129 ஓட்டுப்பதிவு மையங்களில், 295 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவின் போது பயன்படுத்தும் தேர்தல் பொருட்கள் தயார் செய்யப்பட்டு, உடுமலை அரசு கல்லுாரி, பாதுகாப்பு மையத்திலிருந்து, மண்டலம் வாரியாக, போலீஸ் பாதுகாப்புடன் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கான உத்தரவுகள் வழங்கப்பட்டு, உடனடியாக ஓட்டுச்சாவடிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டது.உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்வந்த் கண்ணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஓட்டுச்சாவடிகளில், வாக்காளர்களுக்கான நிழல் பந்தல், வரிசையில் காத்திருக்கும் வசதிகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வந்தால் அவர்களை அழைத்துச்செல்ல வீல் சேர், குடிநீர், கழிப்பிடம், ஓட்டுச்சாவடி எண், மின் விளக்கு வசதி என அனைத்து ஏற்பாடுகளும் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மாடல் ஓட்டுச்சாவடி

அதே போல், சட்டசபை தொகுதிக்கு ஒரு மாடல் ஓட்டுச்சாவடி என்ற அடிப்படையில், உடுமலை தொகுதிக்கு, உடுமலை தளி ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், வாக்காளர்கள் அமர்வதற்கு இருக்கை வசதி, சாமியானா பந்தல், ஏர்கூலர், வாக்காளர் நடந்து வரும் பகுதியில் கம்பள விரிப்பு, பூ அலங்காரம், தோரணங்கள், வண்ண பலுான்கள் என அலங்கரிக்கப்பட்டுள்ளது.மேலும், ஓட்டுச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.மேலும், அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடியும் தொகுதிக்கு ஒன்று அமைக்கப்படுகிறது. உடுமலை தொகுதிக்கு, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.மகளிர் ஓட்டுச்சாவடியை அடையாளப்படுத்தும் வகையில், 'பிங்க்' நிறத்தில், விரிப்புகள், பலுான்கள் என அலங்கரிக்கப்பட்டுள்ளது. இங்கு, ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் - 1, நிலை அலுவலர் - 2, நிலை அலுவலர் 3 உள்பட ஓட்டுப்பதிவு பணிகளில் முழுவதும் பெண்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர் சார்பில் பெண் முகவர்களும், பாதுகாப்பு பணியில் பெண் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மடத்துக்குளம் தொகுதியில், 117 ஓட்டுப்பதிவு மையங்களில், 287 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் பொருட்கள், மண்டலம் வாரியாக ஓட்டுச்சாவடிக்கு, மடத்துக்குளம் கே.டி.எல்., அரசு மேல்நிலைப்பள்ளியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டது. ஓட்டுச்சாவடிகள், இன்று ஓட்டுப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளது.மடத்துக்குளம் தொகுதிக்கான மாடல் ஓட்டுச்சாவடி, உடுமலை கணக்கம்பாளையம் பிரைட் நர்சரி அண்டு பிரைமரி பள்ளியிலும், அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடி, கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் அமைக்கப்பட்டுள்ளது.அதிகாரிகள் கூறியதாவது :ஓட்டுச்சாவடிகளில், காலை, 7:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, ஆதார், டிரைவிங் லைசென்ஸ் என, 13 ஆவணங்களை அடையாள ஆவணங்களாகக்கொண்டு வாக்களிக்கலாம்.ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையங்களுக்கு முன், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணியில் இருப்பாளர்கள்.வாக்காளர்கள் தங்கள் சந்தேகங்கள், ஓட்டுச்சாவடி, வரிசை எண் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்து தரப்படும். எனவே, அனைத்து வாக்காளர்களும், நுாறு சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

மலையேறிய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்

மடத்துக்குளம் தொகுதியில், ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனச்சரகங்களில் உள்ள மலைவாழ் குடியிருப்பில் வசிக்கும் மக்கள் ஓட்டுப்பதிவு மேற்கொள்ள, வனப்பகுதியில், மாவடப்பு, கோடந்துார், தளிஞ்சி ஆகிய மூன்று மலைவாழ் மக்கள் குடியிருப்புகளில் உள்ள, ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுச்சாவடி பொருட்கள் மற்றும் ஓட்டுப்பதிவு அலுவலர்கள், 'ஜீப்' மற்றும் லாரி வாயிலாக, மலைப்பகுதியில் அமைந்துள்ள கரடு, முரடான ரோடுகளில் சென்று, ஓட்டுச்சாவடிகளை தயார் செய்தனர்.ஓட்டுச்சாவடிகளுக்கு மின் வசதிக்காக, ஜெனரேட்டர்களும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ