மேலும் செய்திகள்
ஓடையில் கழிவுகள் வீச்சு: துார்வாருவது அவசியம்
07-Oct-2026
உடுமலை: உடுமலை அருகே, ஏழு குள பாசனத்தின் கீழ் உள்ள, செங்குளம் மற்றும் தினைக்குளம் உட்பட குளங்களில், அருகிலுள்ள கிராமங்களின், குப்பை, கழிவுகள் மற்றும் சாக்கடை கழிவுகள் நேரடியாக கலக்கும் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும். உடுமலை அருகே பள்ளபாளையத்தில், ஏழு குள பாசன திட்டத்திற்குட்பட்ட செங்குளம் அமைந்துள்ளது. குளத்தின் நீர்த்தேக்க பரப்பு, 74.84 ஏக்கராகவும், நேரடியாக, 285 ஏக்கர் நிலங்களும், மறைமுகமாக, ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. செங்குளத்தின் அருகில், பள்ளபாளையம் கிராமம் அமைந்துள்ளது. ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வசிக்கும், இக்கிராமத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர் அனைத்தும், மேற்குப்பகுதியில், ஒருங்கிணைந்து செங்குளத்திற்கு, தண்ணீர் செல்லும் மழை நீர் வடிகாலில் இணைகிறது. அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அதே போல், சுற்றுப்புற கிராமங்கள் மற்றும் நகருக்கு அருகிலுள்ளதால், குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்ட திடக்கழிவுகளும், செங்குளத்தின், நீர் தேக்க பரப்பில் வீசப்படுகின்றன. கழிவு நீர் நேரடியாக குளத்தில் கலப்பதால், தண்ணீர் மாசடைந்து, சாகுபடியில், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது என வேதனை தெரிவிக்கின்றனர். குறிப்பாக, பிளாஸ்டிக் கழிவுகள், ஷட்டர் மற்றும் விளைநிலத்திலுள்ள மடைகளில் அடைத்து கொள்வதுடன், மண் வளத்தையும் பாதிக்கிறது. மாசடையும் தண்ணீரால், பறவைகளும் பாதிக்கப்படும் என்பதால், கழிவு நீர் கலப்பதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என, அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்குளத்திற்கு அருகிலுள்ள, தினைக்குளத்திலும், தளி பேரூராட்சி கழிவுகள் நேரடியாக கலந்து வருகின்றன. நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், ஏழு குள பாசன குளங்களின் அருகில் அமைந்துள்ள கிராமங்களின் கழிவு நீர் குளங்களில் கலக்காமல் இருக்கவும், பாசனம் மற்றும் நிலத்தடி நீர் மட்ட ஆதாரமாக உள்ள குளங்கள், குப்பை, கழிவுகள் கொட்டும் மையமாக மாற்றப்படுவதாக தடுக்கவும், சிறப்புத்திட்டத்தை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக செயல்படுத்த, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.
07-Oct-2026