விசைத்தறி கணக்கெடுப்பு; அரசு சுணக்கம்
பல்லடம் : விசைத்தறி கணக்கெடுப்பை மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் சுணக்கம் காட்டுவதால், விசைத்தறிக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல் நிலவுகிறது.தமிழகத்தில், அதிகப்படியான வேலைவாய்ப்பு வழங்குவதில் ஜவுளி தொழில் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. விசைத்தறிகளின் பங்கு பிரதானமாக உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்துக்கு அடுத்ததாக, தமிழகத்தில்தான் அதிக விசைத்தறிகள் இயங்கி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால், இது தொடர்பான புள்ளி விவரங்கள் இன்றுவரை சேகரிக்கப்படவில்லை.விசைத்தறிகள் குறித்த புள்ளி விவரங்கள் இருந்தால் மட்டுமே, இவற்றின் மூலம் ஆகும் உற்பத்தி, பயனடையும் தொழிலாளர்கள், இத்தொழில் மூலம் அரசுக்கு கிடைக்கும் வருவாய் உள்ளிட்ட பல்வேறு தரவுகளையும் தெரிந்துகொள்ள முடியும். விசைத்தறிகளுக்கான திட்டங்கள், சலுகைகள் உள்ளிட்டவற்றை அரசு அறிவிக்க முடியும்.விசைத்தறிகள் குறித்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என, இரண்டு ஆண்டுக்கு முன் தமிழக அரசு அறிவித்தது. இதேபோல், விசைத்தறி பணி மையம் மூலம், நாடு முழுவதும் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என, மத்திய அரசு, வாய்மொழி உத்தரவும் பிறப்பித்தது. ஆனால், இவை எதுவுமே செயல்பாட்டுக்கு வராததால், தமிழகத்தில், விசைத்தறிகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதே கேள்விக்குறியாக உள்ளது.-----2 காலம் - விசைத்தறி படம்
ஏன் அவசியம்?
தமிழகத்தில், திருப்பூர், கோவை மாவட்டங்களில்தான் அதிகப்படியான விசைத்தறிகள் உள்ளன. கடந்த காலத்தில், 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தறிகள் இருந்த நிலையில், தொழில் நலிவடைந்ததன் காரணமாக, எண்ணற்ற தறிகள், பழைய இரும்புக்கு சென்றன. தற்போது, 2 லட்சத்துக்கும் அதிகமான தறிகள் இருப்பதாக கூறப்படுகிறது. உண்மையான புள்ளி விவரங்களை பெறவும், விசைத்தறி தொழிலுக்கான திட்டங்களை வகுக்கவும் கணக்கெடுப்பு என்பது மிக அவசியம்.- பாலசுப்ரமணியம், செயலாளர், திருப்பூர், கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்கம்.