ஒப்பந்த கூலி கிடைக்காமல் தத்தளிப்பு :பவர்டேபிள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
திருப்பூர்: ஒப்பந்த கூலியை வழங்காத நிறுவனங்களில், 'டெலிவரி எடுக்கவும் மாட்டோம்; கொடுக்கவும் மாட்டோம்' என, பவர்டேபிள் சங்கம் போராட்டம் அறிவித்துள்ளது. திருப்பூரில் உள்ள, உள்நாட்டு பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களுக்கு, 'பவர் டேபிள்' நிறுவனங்கள், 'ஜாப் ஒர்க்' முறையில், உள்ளாடைகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றன. பனியன், ஜட்டி, பாக்கெட் டிராயர்கள் உற்பத்தி செய்ய, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் உள்நாட்டு பனியன் உற்பத்தியாளர் சங்கமும், பவர்டேபிள் சங்கத்தினரும், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒப்பந்தம் செய்கின்றனர். அதன்படி, 2022ம் ஆண்டு, புதிய சம்பள உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அதன்படி, பவர் டேபிள் நிறுவனங்களுக்கு, 17 சதவீத கூலி உயர்வும், அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்கு, தலா 7 சதவீத கூலி உயர்வும் வழங்க ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. பெரும்பாலான நிறுவனங்கள், கூலி உயர்வை சரிவர வழங்கி வருகின்றன; சில பெரிய நிறுவனங்கள் மட்டும், உரிய காலத்தில் கூலியை உயர்த்தி கொடுக்காமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக, கடந்த, ஜூன் 6 ம் தேதி முதல், நடைமுறை கூலியில், 7 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும்; இதுவரை சில நிறுவனங்கள் வழங்கப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரிய நிறுவனங்கள், ஜூன் மாதம் முதல், 7 சதவீதம் கூலி உயர்வை வழங்கவில்லை. இதன்காரணமாக, பொறுமை இழந்த பவர்டேபிள் சங்கத்தினர், நுாதன போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அதன்படி, 7 ம் தேதி முதல் கூலி உயர்வு பிரச்னை தீரும்வரை 'டெலிவரி' எடுப்பதும் இல்லை; கொடுப்பதும் இல்லை என அறிவித்துள்ளனர். அதன்படி, புதிதாக துணியை வாங்கி உள்ளாடை வடிவமைப்பு பணி நடக்காது; வடிவமைத்த உள்ளாடைகளை அனுப்பும் பணியும் நடக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். தடையின்றி வழங்க வேண்டும் பவர்டேபிள் உரிமையாளர் சங்க செயற்குழு கூட்டம், 7 ம் தேதி நடந்தது. ஜூன் மாதம் வழங்க வேண்டிய கூலி உயர்வை வழங்காமல் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. எனவே, கூலி உயர்வு வழங்காத நிறுவனங்களிடம் இருந்து, 'டெலிவரி எடுப்பதில்லை; டெலிவரி கொடுப்பதும் இல்லை' என்று முடிவு செய்துள்ளோம். அதன்படி, கைவசம் உள்ள ஆடைகள் முடிந்ததும், உற்பத்தியை நிறுத்தி காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது பாதிப்புகளை உணர்ந்து, உற்பத்தி நிறுவனங்களும் புதிய கூலி உயர்வை தடையின்றி வழங்க முன்வர வேண்டும். - முருகேசன் திருப்பூர் பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்க செயலாளர்