உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவசர சிகிச்சை தேவைப்படும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகள்... தீர்வு கண்டால் மட்டுமே நிம்மதி

அவசர சிகிச்சை தேவைப்படும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வரிசை கட்டி நிற்கும் பிரச்னைகள்... தீர்வு கண்டால் மட்டுமே நிம்மதி

திருப்பூர், தாராபுரம் ரோடு, பெரிச்சிபாளையத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை உள்வளாகங்கள் துாய்மையாக வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம், பொதுப்பணித்துறையின் அலட்சியப்போக்கால், மருத்துவமனை வெளிவளாகத்தில் பல்வேறு புகார்கள் தலை துாக்கியிருப்பதை காண முடிகிறது.திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரே மருத்துவக்கல்லுாரியான அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பல்வேறு கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அவற்றை முறையாக பராமரிக்காததால், பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.அதில், முதலாவதாக, நுழைவு வாயில் உயரப்படுத்தி கட்டிய போது, சாக்கடை கால்வாய்க்கான 'டிஸ்போசல் பாயிண்ட்' நெடுஞ்சாலைத்துறை ஏற்படுத்தவில்லை. இதனால், வலதுபுறமிருந்து இடதுபுறம் கழிவுநீர் செல்ல வழியில்லை. இதனால், கழிவுநீர் நுழைவுவாயில் அருகில் ஆறாக ஓடுகிறது. அதனை மிதித்தபடியே மருத்துவமனைக்குள் செல்ல வேண்டியுள்ளது. மகப்பேறு மருத்துவமனை பின்புறம் கழிவுநீர் வெளியேறும் குழாய் உடைப்பு ஏற்பட்டு, அப்படியே திறந்த வெளியில் கழிவுநீர் ஓடிக்கொண்டிருக்கிறது. சில இடங்களில் தேங்கி நிற்கிறது. பொதுப்பணித் துறையினர் எட்டிக் கூட பார்ப்பதில்லை. இதனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் மருந்து அடித்தும், கொசுத்தொல்லை அதிகமாகிறது.விபத்து அபாயம்அவிநாசிபாளையம் - அவிநாசி தேசிய நெடுஞ்சாலை எனக்கூறி, மருத்துவமனை முன் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனை முன் கனரக வாகனம், டுவீலர்கள் வாகன ஓட்டிகள் வேகத்தை குறைப்பதில்லை. வேகமாக செல்லும் வாகனங்களால் நோயாளிகளை அழைத்து செல்லும் ஆம்புலன்ஸ்கள், சட்டென மருத்துவமனைக்கு நுழைய முடிவதில்லை. எனவே, மருத்துவமனையின் இருபுறமும் வாகன வேகத்தை குறைக்க பேரிகார்டு வைக்க வேண்டும்.இரும்பு கூவியல்மருத்துவமனையில் பயன்படுத்தி உடைந்து விட்ட, காலாவதியான, பயன்படுத்த முடியாத படுக்கை, பெஞ்ச், டேபிள், வீல்சேர், தள்ளுவண்டி, இருக்கை உள்ளிட்டவை இரும்புகளின் குப்பை கூவியலாக வாகனம் நிறுத்துமிடம் அருகே குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவற்றை அகற்றி விட்டு இவ்விடத்தை பார்க்கிங் அல்லது மாற்று பயன்பாட்டுக்கு வழங்கலாம். அருகிலேயே புதிய, பயன்படுத்த வேண்டிய படுக்கைகளும் உள்ளது. இவற்றை தேவைப்படும் வார்டு, பிரிவுகளுக்கு வழங்க வேண்டும்.'லிப்ட்' யார் கவனிப்பதுஅரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் ஆறு இடங்களில் லிப்ட் உள்ளது. மருந்தகம், புறநோயாளிகள் பிரிவு அருகே உள்ள லிப்ட் பயன்பாட்டில் வைக்கப்படுகிறது. மற்ற லிப்ட் அடிக்கடி பழுதாகிறது. லிப்ட் பழுதுகளை சரிசெய்ய தகுந்த ஊழியர்களை நியமிக்க வேண்டும். அவர்களது மொபைல் போன் எண்களை உதவிக்காக லிப்ட்டுக்குள் எழுதி வைக்க வேண்டும். லிப்ட் பழுது ஏற்பட்டால் நாள் கணக்கில் சரிசெய்யாமல் விடாமல் உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிளாஸ்டிக் தாராளம்பிளாஸ்டிக் பயன்பாட்டை ஓழிக்கும் செயல்பாடுகள் என்று பார்த்தால், மருத்துவமனையில் பூஜ்யம் என்றே சொல்ல வேண்டும். மருத்துவமனை வெளிவளாகத்தில் உள்ள அநேக கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் டீ, காபி, உணவு பொருட்கள் பொட்டலம் கட்டி வழங்கப்படுகிறது. வளாகத்திலேயே அம்மா உணவகம் செயல்பட்ட போதும், அங்கு உணவு தரமில்லாமல் இருப்பதால், அருகில் உள்ள கடைகளிலே நோயாளிகளுடன் வசிப்பவர்கள் உணவு வாங்கி சாப்பிடுகின்றனர். இவ்வாறு, பாலிதீன் கவர்கள் பயன்பாடு மருத்துவமனையில் எங்கு பார்த்தாலும் காணப்படுகிறது.எனவே, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் உள்ள பிரச்னைகளை சரி செய்து, பிற மாவட்ட மருத்துவமனைகளுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பதில், 'டீன்' உள்ளிட்ட அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும்.

போலீசார் கவனத்துக்கு... (படம்)

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முன் வாசலிலேயே போலீஸ் ஸ்டேஷன் இருந்தும், வாகன திருட்டு அடிக்கடி நடக்கிறது. பைக் நிறுத்துமிடம், ஓய்வறை, மகப்பேறு முகப்பு பகுதி உள்ளிட்ட பல இடங்களில் திருடர்கள் ஜாக்கிரதை என்ற அறிவிப்பை பார்க்க முடிகிறது. நோயாளிகளுடன் வருவோர் சற்று அசந்தாலும் கைக்கு கிடைக்கும் பொருளை சுற்றிதிரிபவர்கள் சுருட்டிக் கொள்கின்றனர். போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி, கண்காணிப்பை தீவிரப்படுத்தி திருட்டு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

எலிகள் நடமாட்டம் (படம்)

மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை புதிய கட்டடம் அமைந்துள்ள பகுதியில் தார்சாலை, முற்றிலும் தரைத்தளம் அமைக்கப்பட்டு விட்டது. அதேநேரம், மகப்பேறு மருத்துவ தனிப்பிரிவு கேட், வெளிப்புறம், ஆதரவற்றோர் சிகிச்சை பிரிவு, புற்றுநோய் சிகிச்சை மையம் உள்ளிட்ட இடங்களில் தரைத்தளம் இன்னமும் அமைக்கவில்லை. கல், மண் குவியல்களில் எலி, பெருச்சாளி உள்ளிட்டவை வாழ்கின்றன. இவை வார்டுக்கு வரும் அளவுக்கு தொந்தரவு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ