உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புதிய முதலீட்டு மானிய திட்டத்தில் தளர்வுl பிராசசிங் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

புதிய முதலீட்டு மானிய திட்டத்தில் தளர்வுl பிராசசிங் தொழில்துறையினர் எதிர்பார்ப்பு

திருப்பூர்; 'பிராசசிங்' தொழில்துறையினர் பயன்படும் வகையில், புதிய தொழில் முதலீட்டு மானிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய தொழில் துவங்குவதற்கு மட்டுமின்றி ஏற்கனவே இயங்கும் நிறுவனங்கள் விரிவாக்கம் செய்யவும், இம்மானிய உதவி கிடைக்கும். பசுமை சார் உற்பத்தி மற்றும் நீடித்த நிலையான உற்பத்திக்கான தொழில்நுட்ப மேம்பாட்டுக்காக இத்தகைய வசதி செய்யப்பட்டுள்ளது. தொழில் துவங்க, ஐந்து கோடி ரூபாய் வரையிலும், விரிவாக்க பணிகளுக்கு, நான்கு கோடி ரூபாய் வரையிலும் மானியம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த, திருப்பூர் சாய ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள்; பிரின்டிங் நிறுவனங்கள், புதிய தொழில்நுட்பத்தை 'அப்டேட்' செய்ய அதிகபட்ச மானிய உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. விதிமுறைகள் கடுமை இத்திட்டச் செயல்பாடுகள் மற்றும் விதிமுறைகள் கடுமையாக இருக்கின்றன. இயங்கி வரும் நிறுவனங்கள், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்தால், தொழில்நுட்ப குழு சரிபார்த்து, உடனுக்குடன் மானியம் விடுவிக்கும் வசதியில்லை. மாறாக, பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் அடங்கிய கமிட்டியிடம் முதலில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள், அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, ஒப்புதல் அளித்த பின்பே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலும். இந்த கமிட்டி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே கூடும் என்பதால், விண்ணப்பத்தில் சந்தேகம் என்றால், அடுத்த கூட்டத்தில்தான் சரிசெய்து விண்ணப்பிக்க முடியும். பயனளிக்குமா? இதுபோன்ற பல்வேறு நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இத்திட்டம் தற்போதைய சூழலுக்கு பயனளிக்குமா என்பதும் கேள்விக்குறியாக மாறியுள்ளது. அரசு திட்டம் உடனுக்குடன் பயனளிக்கும் வகையில், அதிகபட்ச விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் தளர்த்த வேண்டுமென, தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஆலோசனை பெற வேண்டும் புதிய திட்டத்தில், 25 சதவீதம் அளவுக்கு முதலீட்டு மானியம் வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், விதிமுறைகளை பின்பற்றி, அவ்வளவு எளிதாக மானியம் பெற முடியாது. அதிகபட்ச விதிமுறைகளை தளர்த்தினால் மட்டுமே திருப்பூர் பயனடையும். எனவே, தமிழக அரசு, இத்திட்ட விதிமுறையை எளிதாக்குவது குறித்து தொழில் அமைப்புகளின் ஆலோசனை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். - 'பிராசசிங்' நிறுவனத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ