குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் பச்சைப்பயிறு - உளுந்து கொள்முதல்
திருப்பூர்; கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விவசாயிகளிடமிருந்து பச்சைப்பயிறு மற்றும் உளுந்து கொள்முதல் செய்யப்பட உள்ளது.நியாயமான சராசரி தரம் பச்சைப்பயிறு கிலோவுக்கு 86.82 ரூபாய், உளுந்து 74 ரூபாய்க்கு, நடப்பாண்டு மார்ச், 15ம் தேதி முதல் ஜூன், 12ம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பச்சைப்பயிறு மற்றும் உளுந்து ஆகிய வற்றுக்கான கிரயத்தொகை, விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்.இந்த திட்டத்தில் கொள்முதல் செய்யப்பட உள்ள பச்சைப்பயிறு, உளுந்து ஆகியவை, வேறு பொருட்கள் கலப்பு, 2 சதவீதம், இதர தானியங்கள் கலப்பு, முதிர்வடையாத, சுருங்கிய பருப்பு மற்றும் சேதமடைந்த பருப்பு, 3 சதவீதம், சிறிதளவு சேதமடைந்த பருப்பு, வண்டு தாக்கிய பருப்பு, 4 சதவீதம், ஈரப்பதம் 12 சதவீதத்துக்குள் இருக்கவேண்டும்.இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் எண், வங்கி கணக்கு எண் விவரங்களுடன், உடுமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முன்பதிவு செய்யவேண்டும்.கூடுதல் விவரங்களுக்கு, 94439 62834 என்கிற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.