திட்டங்கள் இழுபறி; வரி வசூல் பொய்த்தது; ஜிகினா பட்ஜெட் எடுபடாது இனி
திருப்பூர், : மாநகராட்சி பட்ஜெட் இந்த வாரம் தாக்கலாகிறது. 'ஜிகினா' வேலைகள் இல்லாத, யதார்த்தத்தைப் பிரதிபலிக்கும் பட்ஜெட்டாக இது அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. வரி வசூல் மூலம் வருவாயில் சாதிக்கலாம் என்ற எண்ணம் பொய்த்துப்போனதால், இந்த முறை உபரி பட்ஜெட் சாத்தியமாகுமா என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதிகரித்துவரும் தீர்வு காணப்படாத பிரச்னைகளால் மாநகராட்சி நிர்வாகத்திற்குத் தலைவலி அதிகரித்துள்ளது.திருப்பூர் மாநகராட்சியின் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. நடப்பு வாரத்தில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், நகரில் உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் வகையிலான திட்டங்கள் இதில் இடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சாத்தியமானஉபரி பட்ஜெட்
திருப்பூர் மாநகராட்சியின் 2025 -26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இந்த வாரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. தற்போதைய மேயர் உள்ளிட்ட கவுன்சிலர் குழு பதவியேற்ற பின், முதன்முறையாக 2022-23ம் ஆண்டு பட்ெஜட்தாக்கல் செய்யப்பட்டது.அது 1,558 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டாகவும், 10 கோடி ரூபாய் பற்றாக்குறையுடனும் இருந்தது.அதன் பின் 2023-24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் இரண்டாவது பட்ஜெட்டாக, 1,439 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டாகவும், 1.59 கோடி ரூபாய் பற்றாக்குறையுடனும் இருந்தது. கடந்தாண்டு மூன்றாவது பட்ஜெட் 1,576 கோடி ரூபாய்க்கான பட்ஜெட்டாகவும், 87 லட்சம் ரூபாய் உபரி பட்ஜெட்டாகவும் அமைந்தது. பொய்த்ததுஎதிர்பார்ப்பு
கடந்தாண்டில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில் கட்டிய கட்டடங்கள் வாயிலாக வருவாய் எதிர்பார்க்கப்பட்டது. அவ்வகையில் பூ மார்க்கெட் கட்டடம், மத்திய பஸ் ஸ்டாண்ட் ஆகியன நிர்வாகத்துக்கு வருவாயை ஈட்டித்தரும் வகையில் அமைந்தது.பெருமளவு வருவாய் எதிர்பார்த்த டவுன் ஹால் வளாகம், பன்னடுக்கு வாகன பார்க்கிங், புது பஸ் ஸ்டாண்ட் வணிக வளாகம், தினசரி மார்க்கெட் வளாகம் ஆகியன இதுவரை எந்த பயனும் தரவில்லை. நடப்பாண்டில் இவற்றில் உள்ள சிக்கல்களை களைந்து திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டியது அவசியம்.பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டடங்கள் இறுதி கட்டப்பணிகள் தாமதம், டெண்டர் நடைமுறையில் உள்ள சிக்கல்கள் என தொடர்ந்து இழுபறியாகவே இருந்து வருகிறது.நடப்பு நிதியாண்டின் இறுதியில் சொத்து வரி உயர்வு காரணமாக இதன் வாயிலான வருவாய் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சொத்து வரி உயர்வு பிரச்னை பூதாகரமாக தலைதுாக்கிய நிலையில் வரி வசூல் பணியே பெரும் தொய்வைச் சந்தித்துள்ளது. உபரி பட்ஜெட்கேள்விக்குறி
சொத்து வரி உயர்வை மறு பரிசீலனை செய்வது குறித்த தீர்மானம் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னையில் சாதகமான அறிவிப்பை இந்த பட்ஜெட்டில் பல தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.கடந்தாண்டு உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கு மாதம் தோறும் ஊதியம் வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்தது. இதற்காக ஒரு கணிசமான தொகை செலவிடப்படுகிறது.இது தவிர, மின் கட்டணம், விலைவாசி உயர்வுக்கு ஏற்ற நிர்வாகச் செலவினங்கள்; கட்டடங்கள், வாகனங்கள் பராமரிப்பு, ரோடுகள், தெரு விளக்குகள் உள்ளிட்டவை அமைத்தல் மற்றும் பராமரிப்பில் ஏற்படும் கூடுதல் செலவுகள்; பள்ளிகளில் காலை உணவு திட்டம் போன்ற கூடுதல் செலவினங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இதனால் நடப்பாண்டு பட்ஜெட் உபரி பட்ஜெட்டாக அமையுமா என்ற கேள்விக்குறி பல தரப்பிலும் எழுந்துள்ளது. ஆக்கிரமிப்பில்நடைபாதைகள்
தற்போதுள்ள மாநகராட்சி மைய அலுவலகம் குறுகிய இடத்தில் கடும் நெருக்கடியுடன் செயல்படுவதால் இதற்கு புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. நடப்பாண்டு இதற்கான பணிகள் துவங்கப்படும்.பாதசாரிகள் பயன்படுத்தும் விதமாக முக்கிய ரோடுகளில் நடை பாதைகள்; தேவைப்படும் இடங்களில், பயன்படுத்தும் வகையில் நடை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நீண்ட காலமாக உள்ளது. தற்போது அமைக்கப்பட்டுள்ள நடைபாதைகள் கூட ஆக்கிரமிப்புகளால் சூழ்ந்து பாதசாரிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.நகரமைப்பு பிரிவினர் இதை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதை வியாபாரிகளுக்கு உரிய கணக்கெடுப்பு நடத்தி, வெண்டிங் ஜோன் ஏற்படுத்தி அங்கு மட்டுமே பிளாட்பாரக் கடைகள் செயல்பட அனுமதிக்க வேண்டும். இருளில் மூழ்கியமாநகர சாலைகள்
ஒவ்வொரு கூட்டத்தில் வலியுறுத்தியும், ஒப்பந்த நிறுவனத்தின் மெத்தனம், சில இடங்களில் நிர்வாகத்தின் தாமதம் போன்ற காரணங்களால் நகரின் பெரும்பாலான ரோடுகள் தெரு விளக்கு எரியாமல் இருளில் மூழ்கி காட்சியளிக்கிறது. கடுமையான, உறுதியான நடவடிக்கைகளை இதில் மேற்கொள்ள வேண்டும். குப்பை பிரச்னைபெரும் தலைவலி
நகரில் தினமும் சராசரியாக 800 மெட்ரிக் டன் அளவில் குப்பை சேகரமாகிறது. குப்பை தரம் பிரித்து மறு சுழற்சி முறையில் பயன்படுத்த தேவையான நடவடிக்கை கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது.பல்வேறு எதிர்ப்புகள், பிரச்னைகள் மட்டுமின்றி பசுமை தீர்ப்பாயம் வரை இப்பிரச்னையில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குப்பைகள் தரம் பிரித்து பெறவும், சேகரமாகும் குப்பைகளை உரிய வகையில் மறு சுழற்சி முறையில் பயன்படுத்தும் திட்டங்களை விரைந்தும் செயல்படுத்த வேண்டும்.பயோ காஸ், மின்சாரம், உர உற்பத்தி போன்ற திட்டங்கள் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும். ரிசர்வ் சைட்கள், பொது இடங்கள், மாநகராட்சிக்குச் சொந்தமான இடங்கள் கண்டறிந்து ஆக்கிரமிப்பில் இருந்தால் மீட்டு, அதை ஆவணப்படுத்தியும், நிர்வாகத்தின் பயன்பாட்டுக்கு ஏற்ப அவற்றை கையாளவும் உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும்.சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், மக்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண வேண்டிய நெருக்கடியில், மாநகராட்சி நிர்வாகம் உள்ளது.மாநகராட்சி பட்ஜெட்டில் இதை எப்படி சாமர்த்தியமாகக் கையாளப்போகிறது என்பது கேள்விக்குறி.பராமரிப்பின்றி பஸ் ஸ்டாண்ட்பஸ் ஸ்டாண்ட் வளாகம் தினமும் பல்லாயிரம் பேர் வந்து செல்லும் முக்கிய இடமாக உள்ளது. மத்திய மற்றும் புது பஸ் ஸ்டாண்ட் வளாகம் முறையாக பராமரிப்பின்றி உள்ளது. இதை முறையாக கணகாணிக்க வேண்டும். கோவில்வழி பஸ் ஸ்டாண்ட் கட்டடப்பணி முடித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். நகரப் பகுதியில் ரோடுகள் பல இடங்களில் மோசமான நிலையில் தான் உள்ளது.ரோடு சீரமைப்பு குறித்து கவுன்சிலர்கள் தொடர்ந்து வலியுறுத்தியும், ஒப்பந்த நிறுவனங்கள் பொருட்படுத்தாமல் கிடப்பில் போடுவதும், குழாய் பதிப்பு பணிக்காக, புதிய ரோடுகள் தோண்டி சேதப்படுத்தும் நிலையும் தொடர்ந்து நிலவுகிறது. மாநகராட்சி கூட்டம், மண்டல கூட்டம், ஒப்பந்ததாரர் அளவிலான கூட்டம் என்று வலியுறுத்தியும் இந்நிலை மாறவில்லை.