அமைச்சர் வீடு முன் திரண்ட பொதுமக்கள்
திருப்பூர்; 'சிப்காட்' திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, தாராபுரத்தில் அமைச்சர் கயல்விழி வீடு முன் பொதுமக்கள் திரண்டனர். 'திட்டத்தை ரத்து செய்ய உதவுவேன்' என்று அமைச்சர் உறுதி யளித்தார். திருப்பூர் மாவட்டம், தாராபுரம், குளத்துப்பாளையத்தில் அமைய உள்ள 'சிப்காட்' திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என, குளத்துப்பாளையம் சிப்காட் எதிர்ப்பு இயக்கம், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நினைவூட்டல் மனு வழங்க, தாராபுரம் உழவர் சந்தை அருகே, பொதுமக்கள், விவசாய அமைப்பினர், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் நேற்று திரண்டு, மணியம்மை நகரில் உள்ள அமைச்சர் கயல்விழி வீடு நோக்கி சென்றனர். அமைச்சரிடம் தனித்தனியாக மனுக்களை வழங்கி முறையிட்டனர். அப்போது, ''நுாறு சதவீதம் என்னை நம்பலாம். திட்டத்தை ரத்து செய்ய உதவுகிறேன்'' என்று அமைச்சர் உறுதியளித்தார். பின், அனைவரும் கலைந்து சென்றனர்.