மேலும் செய்திகள்
நிழற்கூரை இல்லை: பயணியர் தவிப்பு
28-Oct-2025
உடுமலை: உடுமலையில், நான்கு ரோடு சந்திப்பில் விதி மீறி, விபத்துக்களை ஏற்படுத்தும் வகையில் நிழற்கூரைகள் அமைக்க கூடாது, என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். உடுமலை தாராபுரம் ரோட்டில், இந்திரா நகர் பகுதியில், உடுமலை- தராபுரம் ரோடு, சின்னவீரம்பட்டி, சின்னப்பன்புதுார் என நான்கு ரோடு சந்திப்பு பகுதி உள்ளது. இங்கு வாகன நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்ததையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோடு அகலப்படுத்தும் பணி, மூன்று ஆண்டுக்கு முன் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, அங்கிருந்த பஸ் ஸ்டாப் நிழற்கூரை அகற்றப்பட்டு, நான்கு ரோடுகளும் அகலப்படுத்தப்பட்டு, மையத்தடுப்பான்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், நான்கு ரோடு சந்திப்பில் நெரிசல் ஏற்படாதவாறு, இரு ரோடுகளிலும், 30 மீட்டர் துாரத்தில், பஸ்கள் நின்று செல்லும் வகையில், பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டு, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., நிதியின் கீழ், உடுமலை மற்றும் தாராபுரம் வழித்தடத்தில், இரு புறமும் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் நிழற்கூரை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நான்கு ரோடு சந்திப்பு பகுதியிலேயே, போக்குவரத்து விதி மீறி பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைக்கப்பட்டால், எதிரே வரும் வாகனங்கள் தெரியாததோடு, இரு புறமும் பஸ்கள் நிறுத்தப்பட்டால், நான்கு ரோடு சந்திப்பிலும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விதிமுறைப்படி, நான்கு ரோடு சந்திப்பிலிருந்து, 30 மீட்டர் துாரத்தில் பஸ் ஸ்டாப் நிழற்கூரை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
28-Oct-2025