லட்சியத்தை பள்ளிப்பருவத்திலேயே முயலுங்கள்
திருப்பூர்: ''லட்சியத்தை அடைவதற்கான முயற்சிகளை, பள்ளி பருவத்தில் இருந்தே துவங்க வேண்டும்,'' என, கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசினார். பள்ளி மாணவ, மாணவியரின், கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உட்பட பல்வேறு திறன் அடிப்படையில், மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதத்தில் ஒருநாள், கலெக்டருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி(காபி வித் கலெக்டர்), கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த 'காபி வித் கலெக்டர்' நிகழ்ச்சியில், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் பயிலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவியர், 30 பேர், கலெக்டர் மனிஷ் நாரணவரேவை சந்தித்து கலந்துரையாடினர். கல்வி, போட்டித்தேர்வு, வேலை வாய்ப்பு, தேர்வுகளை எதிர்கொள்ளுதல் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. கல்வியால் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்று மாணவியர் மத்தியில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், இத்தகைய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர். கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசுகையில், ''மனித வாழ்வில் கல்வி அவசியம்; பெண் கல்வி மிக முக்கியம். பள்ளிக்கல்வி என்பது, வாழ்வில் ஒருமுறை மட்டும் கிடைக்கிறது. அனைவரும் லட்சியத்தை உருவாக்கி, அதனை அடைவதற்கான முயற்சிகளை, பள்ளி பருவத்தில் இருந்தே துவங்க வேண்டும். கல்வி மட்டுமல்லாது, தனி திறமைகளை வளர்த்துக்கொண்டு, வாழ்வின் முன்னேற வேண்டும்,'' என்றார்.