வெறிநோய் தடுப்பூசி முகாம் 150 நாய்கள் பங்கேற்பு
உடுமலை: உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் கால்நடை சிகிச்சை மையம், பெதப்பம்பட்டியில் செயல்பட்டு வருகிறது.இம்மையத்தில், சர்வதேச வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி, செல்லப்பிராணிகளுக்கான இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடை சிகிச்சை மையத்தின் தலைவர் துரைசந்திரசேகரன் வரவேற்றார்.கால்நடை மருத்துவ கல்லுாரி முதல்வர் குமாரவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை., யின் ஓய்வு பெற்ற பேராசிரியர் சிவக்குமார் முன்னிலை வகித்து பேசினார்.முகாமில், 150க்கும் மேற்பட்ட நாய்களுக்கு இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்தியன் இம்யூனாலாஜிகல்ஸ் நிறுவனம், முகாமுக்கு தேவையான தடுப்பூசிகளை இலவசமாக வழங்கியது.கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் கால்நடை மருத்துவ கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முகாமில், வெறிநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.