மரங்களில் ரிப்ளெக்டர் பொருத்தம்; நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை
உடுமலை; பல்லடம் மாநில நெடுஞ்சாலையில், ரோட்டோர மரங்களில், ரிப்ளெக்டர் ஸ்டிக்கர் ஒட்டும் பணி நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.உடுமலை - பல்லடம் மாநில நெடுஞ்சாலையின் ஒரு பகுதி, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தால் பராமரிக்கப்படுகிறது. அப்பகுதியில், ரோட்டின் இருபுறங்களிலும், புளியமரம் உள்ளிட்ட மரங்கள் அதிகளவு உள்ளன.இரவு நேரங்களில் மரங்கள் இருப்பது குறித்து, வாகன ஓட்டுநர்களுக்கு தெரியும் வகையில், மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டம் சார்பில், 'ரிப்ளெக்டர்' ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி நடைபெற்று வருகிறது.இதனால், வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தின் வாயிலாக மரங்களில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்கள் பிரதிபலிக்கும்.இத்தகைய ஸ்டிக்கர்கள், மாவட்ட முக்கிய ரோடுகள், மாவட்ட இதர ரோடுகளில் உள்ள மரங்களிலும் ஒட்டப்படும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.