உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஏற்றுமதி தொகை கால அவகாசம் நீட்டிப்பு : ரிசர்வ் வங்கி அறிவிப்பால் நிம்மதி

 ஏற்றுமதி தொகை கால அவகாசம் நீட்டிப்பு : ரிசர்வ் வங்கி அறிவிப்பால் நிம்மதி

திருப்பூர்: இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான தொகையை, வர்த்தகர்களிடமிருந்து பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது, நாடு முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஏ.இ.பி.சி., துணை தலைவர் சக்திவேல் அறிக்கை: இந்திய நிறுவனங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்த பொருட்களுக்கான தொகையை, வர்த்தகர்களிடமிருந்து பெறுவதற்கான கால அவகாசம், ஒன்பது மாதங்களாக இருந்தது. அமெரிக்க சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு கைகொடுக்கும் வகையில், ஏற்றுமதி தொகையை பெறுவதற்கான அவகாசத்தை உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை ஏ.இ.பி.சி., முன்வைத்து வந்தது. அமெரிக்காவில் நிலவும் வரி சார்ந்த பிரச்னைகள் மற்றும் அதுசார்ந்த திருத்தங்கள் காரணமாக, அந்நாட்டு வர்த்தகர்களிடமிருந்து ஏற்றுமதி பொருட்களுக்கான தொகைகளை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த சவால்களை முன்னிறுத்தி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி துணை கவர்னரை சந்தித்து ஏ.இ.பி.சி. சார்பில் கோரிக்கை வைத்தோம். தற்போது, ஏற்றுமதி தொகை பெறுவதற்கான அவகாசத்தை, 15 மாதங்களாக நீட்டித்து, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அதேபோல், முன்பணம் பெற்ற ஏற்றுமதிகளுக்கான அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவும், 12 மாதங்களிலிருந்து, 36 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் மந்தநிலை மற்றும் ஏற்றுமதி பொருட்களுக்கான தொகையை பெறுவதில் ஏற்படும் காலதாமதங்களால் சிரமப்பட்டவரும் ஏற்றுமதியாளர்களுக்கு, அரசின் இந்த நடவடிக்கை, நிவாரணமாக அமையும். இதற்காக, மத்திய நிதி அமைச்சருக்கு ஏ.இ.பி.சி., சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி