பலியான ஆடுகளுக்கு நிவாரண தொகை தயார்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், நாய்க்கடிக்கு பலியான ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க 15 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வந்துள்ளதாக கால்நடைத்துறை துணை இயக்குனர் தெரிவித்தார்.விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் நீர்ப்பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி பேசுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், நாய்கள் கடித்து ஆடுகள் பலியாகும் சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன. நாய்க்கடிக்கு ஆடு பலியானால், இழப்பீடு பெற ஏதுவாக, உடனடியாக எந்த அதிகாரியை தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்கவேண்டும் என்கிற எழுத்துப்பூர்வ வழிகாட்டுதல் வெளியிடப்படவேண்டும். நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கால்நடைத்துறை அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும்'' என்றார்.கால்நடைத்துறை துணை இயக்குனர் புகழேந்தி பதிலளித்து பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் நாய்கடிக்கு பலியான ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க, அரசு 15 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கியுள்ளது.இழப்பீடு பெறும் பயனாளிகள் பட்டியலும் தயாராக உள்ளது. அமைச்சரின் தேதிக்காக காத்திருக்கிறோம். அவர் தேதி கொடுத்தால், ஏதோ ஒரு விழாவில் பயனாளிகளுக்கு இழப்பீடு தொகையை வழங்கி விடுவோம்.உள்ளாட்சி அமைப்புகள்தான் நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சை செய்வதுதான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு. நாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, கால நிர்ணயம், கலெக்கெடுவெல்லாம் நிர்ணயிக்க முடியாது. தொடர்ச்சியாக குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டிருக்க வேண்டியதுதான். நாய்க்கடிக்கு ஆடு பலியானால், உடனடியாக வி.ஏ.ஓ.,வுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, புகழேந்தி பேசினார்.அதற்கு வேலுசாமி, ''நாய்க்கடிக்கு பலியான ஆடுகளுக்கு சந்தை மதிப்பீட்டில் பாதி தொகை தான் இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. அதற்கு ஏன் அமைச்சர் வருகைக்காக காத்திருக்கவேண்டும்.ஆடுகளை இழந்த விவசாயிகள் மனம் நொந்துபோய் உள்ளனர். அவர்களை மேலும் நோகடிக்காதீர்கள். உடனடியாக இழப்பீடு தொகை வழங்குங்கள்,'' என்றார்.