ரேஷன் கடையை இடம் மாற்றுங்க! காட்சிப்பொருளாக புது கட்டடம்
உடுமலை; வா.வேலுார் கிராமத்தில், கட்டி முடிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக காட்சிப்பொருளாக உள்ள ரேஷன் கடை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.குடிமங்கலம் ஒன்றியம், வாகத்தொழுவு ஊராட்சிக்குட்பட்ட கிராமம் வா.வேலுார். கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கடந்த 2021-22ல், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டது.ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இந்த கட்டடம், தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. காட்சிப்பொருளாக உள்ள கட்டடம் பயன்பாட்டுக்கு வராமலேயே வீணாகும் நிலை உள்ளது.இந்நிலையில், கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட நுாலக கட்டடத்தில், தற்காலிகமாக ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.இக்கட்டடத்தின் படிக்கட்டுகள் உயரமாக இருப்பதால், முதியவர்கள் ரேஷன் பொருட்களை வாங்க சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே, புதிய கட்டடத்துக்கு ரேஷன் கடையை இடம் மாற்ற வேண்டும் என, பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதனால், கிராம மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.புதிய கட்டடத்துக்கு ரேஷன் கடையை இடம் மாற்ற, வட்ட வழங்கல் துறையினர் மற்றும் கூட்டுறவுத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.