உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்வாய் கரையில் இருந்த குப்பை அகற்றம்; விவசாயிகள் போராட்டத்தால் நடவடிக்கை

கால்வாய் கரையில் இருந்த குப்பை அகற்றம்; விவசாயிகள் போராட்டத்தால் நடவடிக்கை

உடுமலை; அமராவதி பிரதான கால்வாய் கரையில் கொட்டப்பட்டிருந்த கழிவுகள் அகற்றும் பணி நடக்கிறது. உடுமலை, அமராவதி அணை, பிரதான கால்வாய் வாயிலாக, உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவை சேர்ந்த, 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மடத்துக்குளம் கிருஷ்ணாபுரம் பகுதியிலுள்ள, அமராவதி பிரதான கால்வாய் கரையில், மடத்துக்குளம் பேரூராட்சி கழிவுகள் கொட்டப்பட்டு, குப்பை கிடங்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு, குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் மலைபோல் குவிந்திருந்தன.இதனால், துர்நாற்றம் ஏற்படுவதோடு, கால்வாயில் பாசனத்திற்கு செல்லும் நீரில், இந்த கழிவுகள் கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. பாசன நீர் மாசடைவதோடு, மடைகளில் பிளாஸ்டிக், துணிக்கழிவுகள் அடைத்துக்கொள்வதால், கால்வாய் மடை அடைப்பு காரணமாக பாதிப்பு ஏற்படுகிறது. அமராவதி பிரதான கால்வாயில் குவிந்துள்ள, கழிவுகளை அகற்ற வேண்டும், என திருப்பூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் சங்க செயலாளர் வீரப்பன் மற்றும் விவசாயிகள் மனு அளித்தனர். இதனையடுத்து, குப்பை, கழிவுகளை மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும்; இல்லையென்றால், நீர் வளத்துறை கழிவுகளை அகற்றி, அதற்குரிய தொகையை பேரூராட்சியிடம் வசூலித்துக்கொள்ளுமாறும், ஒரு வாரத்தில் துாய்மைப்படுத்தி அறிக்கை வழங்க கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, மடத்துக்குளம் பேரூராட்சி அதிகாரிகள், கழிவுகளை அப்புறப்படுத்தாமல், இயந்திரங்கள் வாயிலாக கரை பகுதியில் பரப்பி விடும் பணியில் ஈடுபட்டனர். அதிர்ச்சியடைந்த விவசாயிகள், சம்பவ இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் சங்க செயலாளர் வீரப்பன், தலைவர் ராஜரத்தினம், தென்னை விவசாயிகள் சங்க தலைவர் சிவராஜ், நிர்வாகிகள் போஸ், கணேசன் உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்றனர். விவசாயிகள் தரப்பில், கால்வாய் கரையிலிருந்து கழிவுகளை முழுமையாக அகற்ற வேண்டும். இங்கேயே, பரப்பி விடக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, கழிவுகளை பேரூராட்சி வாகனங்கள் வாயிலாக அகற்றப்பட்டது. தொடர்ந்து கால்வாய் கரையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்கவும், பாதுகாப்புக்கு கேட் அமைக்க நீர் வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ