உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 300 இடங்களில் பல்லாங்குழி: விரைவில் சீரமைப்பு துவக்கம்

300 இடங்களில் பல்லாங்குழி: விரைவில் சீரமைப்பு துவக்கம்

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குள், 250 கி.மீ., துாரம் மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடு உள்ளது. அவ்வப்போது, மாநகராட்சி சார்பில், சாலையோரம் குழாய் பதிப்பு, பராமரிப்புப்பணி, பாதாள சாக்கடை குழாய் உடைப்பு சரி செய்வது உள்ளிட்ட பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகிறது. பராமரிப்புப்பணிக்காக ரோடுகளை தோண்டும் போது, அதற்குரிய இழப்பீடு தொகையை, நெடுஞ்சாலைத்துறைக்கு மாநகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும். அந்த தொகையில், தோண்டப்பட்ட இடங்களில் பராமரிப்பு மேற்கொள்ளும் பணியை, நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்வர். ஆனால், மாநகராட்சி சார்பில் தோண்டப்பட்ட குழி சரிவர மூடப்படாததால், பல இடங்களில் ரோடுகளில் குழி ஏற்பட்டது. இதனால், வாகன போக்குவரத்துக்கும், மக்கள் நடமாடவும் பெரும் சிரமம் ஏற்படுகிறது. அந்த வகையில், 25 கி.மீ., துார ரோட்டில், 300க்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டப்பட்ட சாலைகள் மூடப்படாததால் குழியாக இருப்பது, நெடுஞ்சாலைத்துறையினரின் கள ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.'தோண்டப்பட்ட ரோடுகளை மீண்டும் மூடுவதற்கு, மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறைக்கு வழங்க வேண்டிய, 6 கோடி ரூபாயை நிலுவை வைத்திருந்ததால்தான், நெடுஞ்சாலைத்துறையினரால் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்படவில்லை' என, நெடுஞ்சாலைத்துறையினர் கூறினர். சேதமடைந்த சாலைகளை ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குனர் பாஸ்கர பாண்டியன் மற்றும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் உள்ளிட்ட குழுவினர், குண்டும், குழியுமாக இருந்த சாலைகளை பார்வையிட்டு, சாலை சீரமைப்புப்பணிகளை, முடிக்க வேண்டும்' என, அறிவுறுத்தியிருந்தனர். இதையடுத்து, மாநகராட்சி சார்பில், நெடுஞ்சாலைத்துறையினருக்கு செலுத்தப்பட வேண்டிய, இழப்பீடு தொகை செலுத்தப் பட்டது. 'அடுத்த வாரம் ரோடு பராமரிப்புப்பணி துவங்கும்' என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி