மாதேசிலிங்கம் கோவிலில் விரைவில் திருப்பணி துவக்கம் அறநிலையத்துறை விளக்கம்
பல்லடம்:திருப்பூர் அருகே மங்கலம் மாதேசிலிங்கம் கோவில் கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக, அறநிலையத் துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து, கோவில் செயல் அலுவலர் வளர்மதி கூறியதாவது: திருப்பூர் மாவட்டம், மங்கலத்தில், மாதேசிலிங்கம் கோவில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் சிதிலமடைந்து, மீண்டும் புனரமைக்க இயலாத நிலையில் இருந்தது. திருப்பணிகள் மேற்கொண்டு, கும்பாபிஷேகம் செய்யும் நோக்கத்துடன், கோவிலை பிரித்து அகற்றவும், புதிதாக கோவில் கட்டுமானம் செய்யவும் வேண்டி, துறை ரீதியான அனுமதிகள் முறையாக பெறப்பட்டுள்ளன. இதன்படி, சிதிலமடைந்த கோவில் கட்டுமானத்தை பிரித்து அகற்ற, சென்னை ஐகோர்ட் அனுமதி பெறப்பட்டு, மே 5ம் தேதி, அறநிலையத்துறை உயர் அலுவலர்கள், ஆய்வாளர், பக்தர்கள் முன்னிலையில் பாலாலயம் நடந்தது. கோவிலிலிருந்த விக்கிரகங்கள் அகற்றப்பட்டு, சென்னை கமிஷனர் உத்தரவின்படி, பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, கமிஷனர் உத்தரவின்படி, கோவில் கட்டுமானத்தை பிரித்து அகற்றும் பணி, ஜூலை 1ம் தேதி நடந்தது. மிக விரைவில், கோவில் கட்டுமான திருப்பணி முழு வீச்சில் துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துளார்.